நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி - மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
நீட்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் மருத்துவ சீட்டு கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சுஜித். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மூன்று முறை நீட் தேர்வு எழுதினார். கடந்த இரண்டு முறை தோல்வி அடைந்தவர் இந்த முறை குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றார். இதனால் மருத்துவ படிப்பு படிக்க தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துவிடும் என்று நம்பி விடுமுறையில் நாடு திரும்பிய தந்தை ஆனந்தும் பல இடங்களில் முயன்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இதனால் மாணவர் சுஜித் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாதாகக் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து தந்தை ஆனந்த் வெளிநாடு சென்ற நிலையில் மனமுடைந்த சுஜித் நேற்று மதியம் அவருடைய தாயார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய தாயார் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் தூக்கில் தொங்கிய மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.