நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. 1,369 மாநகராட்சி கவுன்சிலர், 3,824 நகராட்சி கவுன்சிலர், 7,409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,602 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.
மேலும் இந்த பதவியிடங்களுக்கு 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. தலைவரான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் மக்களை நேரில் சந்தித்து வாக்குசேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரும் தனித்தனியாக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளும், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் கே.அண்ணாமலை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளும் விறுவிறு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மும்முரமாக வாக்குகள் சேகரித்தனர்.
மேலும் கடந்த ஒரு வாரமாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் தீவிரம் காட்டினர். தாங்கள் போட்டியிடும் வார்டு அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட பகுதியை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரித்தனர். ஒரு வேட்பாளர் வருவதும், மற்றொரு வேட்பாளர் செல்வதும் என்று தெருக்கள் களை கட்டின. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் வேட்பாளர்கள் வழங்கிய துண்டு பிரசுரங்கள் குவிந்தன.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சம்பந்தமில்லாத வெளியூர்க்காரர்கள் யாரேனும் லாட்ஜ்களில் தங்கி உள்ளனரா? என சோதனை மேற்கொண்டு அவர்களை வெளியேற்ற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று இரவு இதற்கான நடவடிக்கைகளை போலீசாருடன் இணைந்து அந்தந்த பகுதியின் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் 1 லட்சத்து 33 ஆயிரம் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுகின்றனர். 648 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,643 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பணியில் வாக்குப்பதிவை நடத்த தயாராக உள்ளனர். வாக்குப்பதிவை கண்காணிக்க மாவட்டம் தோறும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாகவும், இதுதவிர 648 வட்டார பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பரிசோதனைக்கு பின்னர் வேடபாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு தயார்நிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் வாக்குப்பதிவை கண்காணிப்பு கேமரா, இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கண்காணிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 97 ஆயிரத்து 882 போலீசார், 12 ஆயிரத்து 321 ஊர்க்காவல் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர முன்னாள் ராணுவத்தினரும் இந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 73 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு 5,794 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது. 61 லட்சத்து 73 ஆயிரத்து 112 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார், 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.