சிகிச்சைக்கு பணம் கொடுக்காததால் முதியவரின் கை, கால்களை கட்டிப்போட்ட மருத்துவமனை!
By Aruvi | Galatta | Jun 08, 2020, 12:05 pm
சிகிச்சைக்கு பணம் கொடுக்காத முதியவரின் கை, கால்களை கட்டிப்போட்டு மருத்துவமனை நிர்வாகம் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதான லக்ஷ்மி நாராயணன், கடும் வயிற்று வலி காரணமாகத் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால், அங்கிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஜாபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், முதியவர் லக்ஷ்மி நாராயணனை அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.
அங்கு, முதியவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் தொடக்கத்தில் அவரது குடும்பத்தினர் பணம் செலுத்தி உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யும்போது, மருத்துவமனை சார்பில் மேலும் 11,270 ரூபாய் பணம் கூடுதலாக செலுத்துமாறு, மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது.
ஆனால், அந்த முதியவரின் குடும்பத்தினரிடம் அவ்வளவு பணம் இல்லாமல், மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கெஞ்சிக் கேட்டு, அவரை அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், குடும்பத்தினர் அந்த பணத்தைச் செலுத்தவில்லை என்றால், முதியவரை அழைத்துச் செல்ல முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், முதியவரின் குடும்பத்தினர் தெரிந்தவர்களிடம் கடன் கேட்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, முதியவர் வெளியே தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, அவர் தங்கி சிகிச்சை பெற்று வந்த அதே படுக்கையிலேயே, அந்த முதியவரின் கை மற்றும் கால்களை, அங்கிருந்த சில மருத்துவமனை ஊழியர்கள் கட்டிப் போட்டனர்.
இதனை, அங்கு சிகிச்சை பெற்று வந்த பிற நோயாளிகளின் உறவினர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், இது மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கவனத்திற்குச் சென்றுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.