தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் உடனான ஆலோசனைக்கு பின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் சிறப்பு 'டேட்டா செல்' என்ற செயலியும் தொடங்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “புதிய தரவு மையத்தின் மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ள முடியும். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். 

தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும். இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும்.

ma subramanian omicron night curfewமே மாதத்திற்கு பிறகு 77 இடங்களில் சித்த மருத்துவ கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டன. முதல் மற்றும் 2-வது கொரோனா அலையின்போது இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தற்போது தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது. 

வரும் டிசம்பர் 31-ம் தேதி இரவு நேர ஊரடங்கு விதிப்பது தொடர்பாக முதல் அமைச்சர் தலைமையில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அந்த ஆலோசனைக்குப் பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக முடிவெடுப்பார்” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்து ஆய்வுசெய்ய மத்திய நிபுணர் குழு நேற்று இரவு சென்னை வந்தடைந்தது.
தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களான மருத்துவர்கள் வினிதா, சந்தோஷ் குமார், தினேஷ் குமார் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய குழுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் தமிழ்நாடு அரசு அதிகாரிகள். 
 
தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து மத்திய குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், ஒமிக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது. 

omicron night curfew omicron variant in Tamil Naduஇந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இதன்படி டெல்லியில் 142 பேருக்கும், மகாராஷ்டிராவில் 141 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 41 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 9 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 6 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும்,  சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், உத்தரகாண்டில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.