அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மறுபக்கம் தென்கிழக்கு வங்க கடல் முதல், தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவம்பர் 11 ஆம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கரையை நெருங்ககூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற்றம் அடையும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, செவ்வாய்கிழமை அன்று நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

r1

புதன்கிழமை அன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும் பெய்யும்.

வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை அன்று கடலூர், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்,  கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும் பெய்யக் கூடும்.

சேலம், தருமபுரி , கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். வெள்ளிகிழமை அன்று வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அவ்வபோது கன மழையும் பெய்யக்கூடும். இந்தநிலையில் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

r1

புதன் மற்றும் வியாகிழமை அன்று தமிழகத்தின் கடலோர பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.

மேலும் வட தமிழக கடலோர பகுதிகளிலும், கேரளா , கர்நாடகா கடலோர பகுதியிலும், லட்சத்தீவு பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்படும் என்றும், தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடல் சீற்றத்தால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.