உருவாகிறது புதிய புயல்! தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!!
By Aruvi | Galatta | Nov 28, 2020, 02:43 pm
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்க கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்து தமிழகத்தில் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனையடுத்து. அந்த புயல் புதுச்சேரிக்கும் - மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25 ஆம் துதி அதி நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையைக் கடந்தது.
இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிவர் புயல் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொட்டி தீர்த்ததால், அதிலும் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவானது. அந்த புயல், நேற்று ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைகொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், நிவர் புயல் தொடர்ச்சியாக தற்போது தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புதிதாக உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அது புயலாகவும் மாறவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அப்படி, அது புயலாக மாறினால், அதற்கு “புரெவி” என்று பெயர் வைக்கப்படும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே நிவர் புயலின் போதும், புயலுக்கு பின்பும் கொட்டி தீர்த்த கன மழையால் செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி தனது முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி உள்ளது. அதன் படி, மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்திறப்பு எதுவும் இல்லை என்றும், கூறப்படுகிறது. இதனால், அந்த ஏரியை சுற்றி உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதே போல், நிவர் புயலுக்கு பிறகு கொட்டி தீர்த்த கன மழையால், ராணிப்பேட்டை அருகே பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பழைய பாலம் அருகே மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பல கிராம மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தனி தீவில் மாட்டிக்கொண்டது போல அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், நிவர் புயலால் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக, வேலூர் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
இதனிடையே, “நாளை மத்திய வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாகத் தமிழகத்தில் அதிக கன மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று, இந்திய வானிலை மைய இயக்குனர் அறிவித்து உள்ளார்.
இதன் காரணமாக, “டிசம்பர் 2 ஆம் தேதி நாகபட்டினம் அருகே அந்த புயல் கரையை கடக்கும்” என்றும், இந்திய வானிலை மைய இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.