“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலம் யாருக்கு சொந்தம்?” கோயில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக புதிய சர்ச்சை..
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில், சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழம் பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில், உலக புகழ் பெற்ற திகழ்கிறது. “அத்தகைய ஒரு சிறப்பு மிக்க கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஒருவரின் பெயரில் தற்போது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால், நம்ப முடிகிறதா?” ஆம், அப்படியான ஒரு புகார் தான் தற்போது எழுந்திருக்கிறது.
அதாவது, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பத்திரப் பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை செய்து வந்தார்.
அப்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, தனது அதிகார வரம்புக்கு வெளியே உள்ள நிலம் உள்பட பல்வேறு சொத்துக்களை கோயில் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல், தனியாருக்கு ஆதரவாக பதிவு செய்து கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த குற்றச்சாட்டு பரவலாக எழுந்த நிலையில், மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் படி, இது தொடர்பாக சார் பதிவாளர் பாலமுருகன் கோயில் சொத்துக்களை தனியாருக்கு பதிவு செய்து கொடுத்தது இந்த விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதனால், இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து சார் பதிவாளர் பாலமுருகன் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டள்ள சார் பதிவாளர் பாலமுருகன், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக, சார் பதிவாளர் பாலமுருகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், சார் பதிவாளர் பாலமுருகனுக்க தற்போது சிக்கலுக்க மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.