நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... 3 மாணவர்கள் உயிரிழப்பு!
நெல்லை மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு சென்று பயின்றனர்.
காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்ல தொடங்கினர். கழிவறையின் ஒரு பகுதிக்கு வெளியே சில மாணவர்கள் காத்து நின்றதாக தெரிகிறது. அப்போது திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது.
இதைப் பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தெறித்து அங்குமிங்கும் ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார், பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் மற்றும் நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் ( 13) மற்றும் 9-ம் வகுப்பு மாணவனான டவுனை சேர்ந்த அன்பழகன் (14) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தனர்.
பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சஞ்சய், இசக்கி பிரகாஷ், அபுபக்கர் உள்பட 4 மாணவர்கள் பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சஞ்சய் என்ற மாணவர் உயிரிழந்தார். மற்ற 3 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுவர் இடிந்து சக நண்பர்கள் பலியானதால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது. இதனால் மற்ற மாணவர்களை போலீசார் பத்திரமாக அங்கிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சம்பவம் குறித்துப் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் 2,700 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்குள் இருக்கும் சுகாதார வளாகத்திற்குள் மாணவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது சுற்று சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியாகியுள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை உயரதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கட்டிட பொறியாளர்கள், கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடடப்பட்டுள்ளது. இதே போல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையையும் ஆய்வு செய்ய உள்ளோம்.
கடந்த மாதம் நடைபெற்ற முதன்மை கல்வி மாவட்ட அலுவலர்கள் கூட்டத்தில், சேதமடைந்துள்ள பள்ளி கட்டடங்களில் குழந்தைகளை அனுமதிக்கூடாது என்று கண்டிப்பாக கூறியுள்ளோம்.
அதன்படிதான் செயல்பட்டு வருகின்றார்கள். இன்று நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானது. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
சுவர் இடிந்து உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.