நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற ‘நம்ம ஊர் திருவிழா’- 400 பேர் கலைஞர்கள் பங்கேற்றனர்!
கிராமிய மனம் கமழும் வகையில், சென்னையில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற ‘நம்ம ஊர் திருவிழா’ நேற்று கொண்டாடப்பட்டது.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பண்டிகை காலத்தில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் வீதிகள் தோறும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததையடுத்து, கடந்த பொங்கல் பண்டிகையின்போது ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.
ஒத்தி வைக்கப்பட்ட ‘நம்ம ஊர் திருவிழா’ நிகழ்ச்சி, தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் நேற்று வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
மேலும் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘தமிழ் மொழியின் தொன்மையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான முன்முயற்சிக்கான வடிவமாக இந்த விழா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடத்தப்படுகிறது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது சென்னையில் ‘வீதிகள் தோறும் சங்கமம்’ என்ற கலை திருவிழாவை கனிமொழி எம்.பி. முன்னெடுத்தார்.அப்போது நாட்டுப்புற கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின்னர் அவர்களுடைய அங்கீகாரம் மறைய தொடங்கியது. அதனை மீண்டும் மீட்டெடுப்பதற்காக ‘நம்ம ஊர் திருவிழா’ நடக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் நிகழ்வாக இந்த விழா அமைந்துள்ளது’’, எனறு தெரிவித்தார்.
விழாவின் நோக்கம் குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவரும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளருமான பி.சந்திரமோகன் பேசினார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி வரவேற்று பேசினார். சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நன்றி என தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளர் த.உதயசந்திரன், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் விழாவில் திரைப்பட பாடகர்கள் கானா பாலா, வேல்முருகன், அந்தோணிதாசன், பாடகிகள் சின்ன பொண்ணு, மாரியம்மா ஆகியோர் கிராமிய பாடல்களை பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். ‘டிரம்ஸ்’ சிவமணி தனது இசை மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
கிராமிய மணம் கமழும் வகையில் அம்மன் ஆட்டம், பறையாட்டம், கரகாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல கட்டைக்கூத்து, கொம்பு இசை, மகுடம் இசை, துடும்பு மேளம் போன்ற பல வகை கிராமிய இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இந்த விழாவில் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களுக்கு இசை விருந்து வைத்தனர்.