நாமக்கல் அருகே “என் பொண்டாட்டிய வேற ஒருவருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க நிச்சயம் பண்ணிட்டாங்க சார், காப்பாத்தி கொடுங்க” போலீசாரிடம், பாதிக்கப்பட்ட கணவன் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மூவரசன் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் கடந்த பல வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். 

இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்த நிலையில், பல இடங்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அங்கும், அவர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இருவர் வீட்டிலும் திருமண பேச்சு நடந்துள்ளது. இதனால், சுதாரித்துக்கொண்ட காதலர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னையிலேயே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவியதால், காதல் தம்பதிகள் இருவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்த படியே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் வீட்டில் அவரது பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், திடீரென்ற நிச்சயதார்த்தமும் செய்து உள்ளனர்.

இது குறித்து அந்த இளம் பெண், தனது காதல் கணவன் மூவரசனுக்கு இ மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், “என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள். நாம் சென்னையில் சென்று வாழலாம்” என்றும், அவர் இ மெயில் மூலம் தெரிவித்திருந்தார். 

இந்த இமெயிலைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த மூவரசன், என்ன செய்வது என்று தெரியாமல், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “ என் காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள் என்றும், எங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட பெண் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், மூவரசன் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் என்ஜினீயர் வீட்டில் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் இருப்பதாகவும், அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.