வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கருத்து
By Madhalai Aron | Galatta | Sep 27, 2020, 03:16 pm
மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும், கடந்த சில தினங்களாகவே பெருமளவில் போராட்டங்களும் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு தந்துள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியான திமுக, கடுமையாக இதை எதிர்க்கிறது. இந்த மசோதாக்களை ஆதரிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இனி தன்னை ஒரு விவசாயி என்று முன்மொழிய வேண்டாம் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, `விவசாயம் பற்றி தெரியாததால் தான் ஸ்டாலின் விவசாய சட்டங்களை எதிர்க்கிறார்' என்று கூறியிருந்தார்.
தற்போது வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று (செப்டம்பர் 27) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :
``அரசின் இந்த மூன்று வேளாண் மசோதாக்கள், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கின்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. வளர்ச்சியை வரவேற்பதில் என்றுமே முதல் நபராக நான் நிற்பேன். ஆனாலும், அந்த வளர்ச்சி விவசாயிகளின் நலனைக் காவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்
இச்சட்டத்தின்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதனால் விவசாயிகள் தானியங்களைச் சேமித்து வைக்க முடியும், எனவே, கூடுதல் விலை கிடைக்கும் என்று கூறுகிறது அரசு. ஆனால், நடைமுறையில், பெரும் வணிக முதலாளிகளே இவற்றை வாங்கிப் பதுக்கி வைத்துக் கொள்கின்றனர்.இதன் மூலம் பெரும் நிறுவனங்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த மசோதா வழிவகுக்கும்
எந்த மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியும், எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம். இதனால் ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், விலை உயர்ந்தாலும் மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்கின்ற ஆபத்தான சூழல் உருவாகி உள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மாநில சுயாட்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது, ஒருபுறம் வேடிக்கையாகவும் மறுபுறம் அதிர்ச்சியாகவும் உள்ளது
மத்திய அமைச்சர் ஒருவர் இந்த மசோதாவை எதிர்த்து தன் பதவியையே தூக்கி எறிகின்றபோது, விவசாயி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருப்பது, நம் மாநில விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் இல்லையா என்ற கேள்வியையும் கமல்ஹாசன் முன்வைத்தார்.
விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்று விவசாய சேவைகள் சட்டத்தின் மூலம், சாதாரண விவசாயியின் பொருட்களுக்கு விலை உறுதி செய்யப்படும், அதனால், நல்ல விலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறும் அரசு, தனியார் பெரும் முதலாளியே விலையை நிர்ணயம் செய்யும் அபாயம் ஏற்படும் என்பதை ஏன் மறைக்கிறது?
தரம் காரணமாக அந்தப் பொருட்களைப் பெரும் நிறுவனங்கள் வாங்க மறுத்தால், அவர்களை எதிர்த்து ஒரு சாதாரண விவசாயியால் போராட முடியுமா? இதனால் விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மசோதா.
தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்”
என்று கூறப்பட்டுள்ளது