கொரோனா பலிக்கு ரூ.1 கோடி.. குடும்ப அட்டைக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்! தமிழக கொரோனா அப்டேட்..
By Aruvi | Galatta | 02:24 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாயும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
- தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய், தமிழக அரசு சார்பில் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
- அரசின் நிபந்தனைகளுடன் கொரோனா நிவாரண உதவிகளைத் தன்னார்வலர்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற அனுமதி வழங்கி உள்ளது.
- நிவாரணம் வழங்க 3 பேர் மட்டுமே செல்லலாம் என்றும், 48 மணிநேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றி, அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும், தகவல் தெரிவித்தாலே போதும் என்றும், திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கொரோனாவால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடம் கல்விக்கட்டணம் கேட்டு வற்புறுத்தக்கூடாது என்று, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்குத் தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,08,139 பேர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
- ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1.94 லட்சம் வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 144 தடை உத்தரவை மீறியதாக, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.89 லட்சத்து 23 ஆயிரத்து 644 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- தடையை மீறி செயல்பட்டதாகப் பொதுமக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, இன்று முதல் திரும்ப ஒப்படைக்க காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
- கொரோனாவால் மளிகை பொருளின் விலை உயர்வு என்ற குற்றச்சாட்டைத் தடுக்க, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விலை பட்டியல் மூலம் குற்றச்சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.