அக்காவை பேஸ்புக்கில் காதலிக்க வைத்து பணம் பறித்து வந்த தம்பி! கணவனும் உடந்தை!!
By Aruvi | Galatta | Nov 13, 2020, 07:44 pm
அக்காவை பேஸ்புக்கில் காதலிக்க வைத்து, தம்பி பணம் பறித்து வந்த சம்பவத்தில், அந்த பெண்ணின் கணவனும் அதற்கு உடந்தையாக இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி ஒரு சபலமான சம்பவம், நம்ம தமிழகத்தில் தான், அதுவும் திருவாரூர் மாவட்டத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.
திருச்சியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவர், பொழுது போக்கிற்காக, எந்நேரமும் இணையத்திலும், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களிலும் மூழ்கிப் போய் இருந்து உள்ளார்.
அந்த சமயம், திருவாரூரை சேர்ந்த அனுசியா என்ற இளம் பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில், அவரது அழகான போட்டோவை, அந்த இளைஞர் பார்த்து தன்னை உத்வேகப்படுத்தி இருக்கிறார். ஃபேஸ்புக் பக்கத்தில், அவரது அழகான போட்டோவை பார்த்ததும், அந்த இளைஞர் பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து இருக்கிறார்.
அந்த இளைஞனின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டைப் பார்த்த உடனேயே, எதிர் முனையில் இருந்து அந்த நட்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணின் ஃபேஸ்புக்கில் அந்த இளைஞர் தொடர்ச்சியாக சாட்டிங்கில் இருந்து உள்ளார். அப்போது, எதிர் முனையில் உள்ள இளம் பெண்ணின் செல்போன் நம்பரையம் அந்த நபர் கேட்டு வாங்கிக்கொண்டார். அதன் பிறகு, அந்த குறிப்பிடப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, அந்த இளைஞர், தொடர்ச்சியாகப் பேசி தனது ஆசையை வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறார்.
அதே நேரத்தில், எதிர் முனையில் பேசிய பெண், “காதல் வசனங்களை” பேசியே இந்த இளைஞரை கவர்ந்து இழுத்து உள்ளார். இதன் காரணமாக, தனக்குத் திருமணமான தகவலையும் மறைத்த அந்த இளைஞர், முகம் தெரியாத அந்த பெண்ணுடன் தொடர்ச்சியாகப் பேசி பழகி வந்திருக்கிறார்.
அதன் பிறகு தான், முகம் தெரியாத அந்த பெண், அந்த இளைஞரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கேட்க ஆரம்பித்து உள்ளார். தனக்கு நடந்த திருமணத்தையும், தனக்கு உள்ள மனைவியையும் மறைத்து, செல்போனிலேயே காதலை வளர்த்த அந்த இளைஞரும், அந்த பெண் கேட்கும் போதெல்லாம், அந்த பெண்ணிற்குப் பணம் அனுப்பி வந்துள்ளார். இப்படியாக, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை, அந்த இளைஞர் அந்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், தனது ஃபேஸ்புக் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அந்த இளைஞர் திட்டமிட்டார். அதன் படி, ஒரு பரிசுப் பொருட்களுடன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி மேட்டுத் தெருவில் உள்ள அனுசியா வீட்டிற்கு அந்த இளைஞர் சென்று உள்ளார். ஆனால், அங்கு சென்று பார்த்த போது, “தன்னுடன் இத்தனை நாட்களாக ஃபேஸ்புக்கில் பேசி பழகி வந்தது இளம் பெண் இல்லை” என்பது தெரிய வந்தது.
மேலும், “தன்னுடன் இத்தனை நாட்களாக ஃபேஸ்புக்கில் பேசி பழகி வந்தது 40 வயது நடுத்தர பெண் அனுசியா” என்பதும், அந்த இளைஞனுக்குத் தெரிய வந்தது. அத்துடன், அந்த பெண் ஃபேஸ்புக்கில் வைத்து உள்ள போட்டோவானது, பக்கத்து வீட்டுப் பெண்ணுடையது என்பதும், அந்த இளைஞருக்குத் தெரிய வந்தது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக பக்கத்து வீட்டில் சென்று நடந்த இந்த மோசடி சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடி செய்த அனுசியாவின் சொந்த தம்பியான கவிதனே, தன்னுடைய சொந்த அக்காவை ஃபேஸ்புக்கில் காதலிக்க வைத்து, பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த மோசடி செயலுக்கு, அனுசியாவின் கணவர் அய்யப்பனும் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், 3 பேரையும் போலீசார் கைது செய்து, இதே போல் இன்னம் எத்தனை பேரை ஏமாற்றி உள்ளார்கள் என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.