“ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷத்துடன் கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டியில், நேற்றைய தினம் திருமண விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது.
இந்த திருமண விழாவை, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக கைதாகி சிறையில் இருக்கும் சாமியார் ராம்பாலின் ஆதரவாளர்கள், தற்போது நடத்தினார்கள்.
மிகச் சரியாக பிற்பகல் 2 மணி அளவில், திருமண விழாவில் இரு வீட்டார் சொந்த பந்தங்கள் எல்லாம் கூடி இருந்த அந்த நேரத்தில் அங்கு திடீரென்று வந்த 10-15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, “இந்த திருமணம் தவறான முறையில் நடைபெறுவதாக” கூறி, அங்கிருந்த சிலரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அந்த கும்பலில் சிவப்பு சட்டை அணிந்து வந்திருந்த ஒருவர், தான் கொண்டு வந்த கை துப்பாக்கியால் அந்த திருமண விழாவில் இருந்த ஒருவரை நோக்கி “ஜெய்ஸ்ரீராம்” என்ற கோஷமிட்டபடியே சுட்டுள்ளார்.
இதில், அந்த திருமண விழாவில் இருந்த தேவிலால் மீனா என்பவர் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட தேவிலால் மீனா என்பவர், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதனையடுத்து, அந்த கும்பல் “ஜெய்ஸ்ரீராம்” என்று கோஷமிட்டபடி அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தேவிலால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் லலித், மங்கள், கமல் ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதனிடையே, “ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷத்துடன் கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் மத்தியப் பிரதேசம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.