இன்றைய கால கட்டத்தில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளி செல்லும் மாணவிகளிடம் ஆசைவார்த்தை பேசி காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் வாழ்க்கையை சீரழிக்க ஒரு கூட்டமே திரிகிறது என்று தான் சொல்லும் நிலமையில் நாம் வந்து நிற்கிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது கோயம்புத்தூரில் நடந்திருக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தினமும் பள்ளிக்கூடம் சென்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய் விட்டார். 

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள் அந்த மாணவியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இறுதியில் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தியதில், மாணவி கடத்தப்பட்டது தெரிய வந்தது. 

அதன்படி, ஆனைமலையில் வசிக்கும் சபரீஸ்வரன் என்ற தொழிலாளி, இந்த 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

குறிப்பாக, அந்த 10 ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாணவியை நாமக்கலுக்கு கடத்தி சென்ற சபரீஸ்வரன் என்பவர், அந்த மாணவியை திருமணம் செய்துகொண்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சபரீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

மேலும், கடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

பள்ளி படிக்கும் காலத்தில் படிப்பை தவிர மற்ற விஷயங்களில் கவனம் சிதறுவதால், இன்றைய இளைய தலைமுறை இது போன்று அவர்களின் வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள். மாணவர்களுக்கு இது குறித்து தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதனிடையே, பள்ளி மாணவியை ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.