“தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க” கூட்டத்தில் பெண் ஆர்.டி.ஓ ஆவேசம்..
By Aruvi | Galatta | Aug 11, 2020, 11:20 am
மதுரையில் நடந்த கல்குவாரி பிரச்சனை தொடர்பான கூட்டத்தல் ஆவேசமடைந்த பெண் ஆர்.டி.ஓ, “தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க” என்று கொந்தளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் திருமலங்கலம் அடுத்துள்ள கூத்தியார் குண்டு பகுதியில் அமைந்துள்ள கருவேலம்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியானது ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவருக்க சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த கல்குவாரியில் உள்ள கிரசர் இயந்திரத்தில் இருந்து வெளியேறும் தூசியினால், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டிய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், அந்த கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், ஆர்.டி.ஓ.விடமும் கோரிக்கை மன வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கல்குவாரி பிரச்சனை குறித்து அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மதுரை திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. சௌந்தர்யா தலைமையிலான டி.எஸ்.பி. வினோதினி முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தையில் கல்குவாரியை நடத்தி வரும் அதிமுக பிரமுகர் சார்பில் 4 பேரும், ஊர் மக்கள் சார்பில் மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த 5 பேரும் கலந்துகொண்டனர்.
அப்போது, கல்குவாரி நடத்துபவர் தரப்பில் இருந்த கூட்டத்தில் பேசிய பிரமுகர் ஒருவர், “கல்குவாரி கிரிசரில் இருந்து துகள்கள் வெளியில் செல்லாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, விரைவில் அது செயல்படுத்தப்படும்” என்றும், பேசினார்.
அதற்கு ஊர்மக்கள் சார்பில் கூட்டத்தில் பேசிய மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த சரவணக்குமார், “கல்குவாரி பிரச்சனையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஆர்.டி.ஓ. சௌந்தர்யா ஆகிய நீங்களும், ஒரு தலை பட்சமாகச் செயல்படுவதாகவும், அது தொடர்பான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளதாகவும் கூறினார்.
இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த ஆர்.டி.ஓ. சௌந்தர்யா, “ இருக்கையில் இருந்து எழுந்து, சரவணகுமாரிடம் உள்ள வீடியோ ஆதாரத்தைக் காட்டச் சொல்லி குரலை உயர்த்தி” சத்தம் போட்டார்.
ஆனால், சரவணகுமார் இது தொடர்பான ஆதாரங்களைக் காட்டாமல் அமைதியாக அங்கேயே நின்றுள்ளார். இதனால், இன்னும் ஆவேசமடைந்த ஆர்.டி.ஓ. சௌந்தர்யா, தன் மேஜையில் இருந்த பைல்களை தூக்கி அடிச்சு.. ஆவேசமாகச் சத்தம் போட்டார்.
மேலும், “ஆதாரமில்லாத குற்றச்சாட்டு சொன்ன காரணத்திற்காக, உங்கள் மீது மான நஷ்ட வழக்குப் போடலாமா?”என்றும், அவர் எதிர்க் கேள்வியை ஆவேசமாகக் கேட்டார். மேலும், அவர் ஆவோமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கும் சரவணகுமார், அதற்கும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்ததாகத் தெரிகிறது.
இதன் காரணமாக, இந்த அமைதி பேச்சு வார்த்தை, எந்த முடிவும் எட்டப்படாமல் பாதியிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து, வெளியே கூடியிருந்து அந்த ஊர் மக்கள் கல்குவாரியை நிரந்தரமாக மூடும் வரை போராடுவோம் என்று, முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினர். அதன்படி, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.