பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி.. சீறும் காளைகளை அடக்க சீரி பாயும் காளையர்கள்.!
By Aruvi | Galatta | Jan 15, 2021, 10:10 am
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ள நிலையில், சீறும் காளைகளை அடக்க காளையர்கள் சீரி பாய்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழா போலவே கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாக ஊர் புகழ் பேசுகின்றன.
அதன் படி, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்று காலை 8 மணிக்கு மேல் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. இந்த போட்டியில், 800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.
தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அதன் படி, பாலமேட்டில் முதல் காளையாகக் கோயிலுக்குச் சொந்தமான காளை களம் இறக்கப்பட்டது. அந்த காளை அவிழ்த்து விடப்பட்ட வேகத்தில் துள்ளிக் குதித்து ஓடியது.
காலை 8 மணிக்கு மேல் தொடங்கிய இந்த போட்டியானது, மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் களம் காணும் இந்த போட்டியில், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 25 வீரர்கள் என்ற வகையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை பாலமேட்டில் இருந்து மட்டும் இல்லாமல், அந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளான அளவில் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், பார்வையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தக்க பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் சுமார் 2 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காயம் படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் உள்ளனர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. காயம் படும் காளைகளை அழைத்துச் செல்ல இரண்டு கால் நடை அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்கின்றன.
வீரர்களுக்குப் போக்குவரத்து காவல் துறையினர் முன்னிலையில் மது போதை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர், ரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும்
பரிசோதிக்கப்பட்டன. உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என சோதனை செய்த பின்னரே, வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டி சர்ட் அணிவிக்கப்பட்டு,
ஜல்லிக்கட்டு களத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் படியே, களத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு மதுரை மண்ணில் வீரம் தெறிக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகக் களம் காணும் வீரர்கள், பிடிபடாத காளைகளுக்கு எல்இடி டி.வி , பிரிட்ஜ், தங்கக்காசு, இருசக்கர வாகனங்கள், கட்டில், மெத்தை, சைக்கிள் போன்ற விலை உயர்ந்த எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.