உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டதைத் தொடர்ந்து,  திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் அதுவும் நம்ம மதுரை மாவட்டத்தில் தான் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முகூர்த்தக்கால் நடப்படும் பணிகளும் துவங்கி முடிவடைந்து உள்ளன.

அதன்படி, மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக, வரும் 15 ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் துவக்கமாக, உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடைபெறும் பணியானது, நேற்று மாலை நடைபெற்றது. 

அதன்படி, ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதான களத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில், ஜல்லிக்கட்டு விழா குழு சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர், “அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்” என்று குறிப்பிட்டனர்.

அத்துடன், “வாடிவாசலுக்கு வண்ணம் பூசுதல், பார்வையாளர்கள் பகுதி அமைத்தல், தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற பணிகளை துவக்க இருப்பதாகவும்” ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கூறினர். 

“இன்னும் ஓரிரு நாட்களில் போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களின் முன் பதிவு நடைபெற இருப்பதாகவும், கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசின் சார்பில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது” என்றும், அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், தமிழக அரசின் அறிவுரைபடியே, “ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதிப்பதா? அல்லது காளை மற்றும் மாடுபிடி வீரர்களை மட்டும் அனுமதிப்பதா?” என்பது தெரிய வரும். 

ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு உடற் தகுதி தேர்வு நடைபெற்று முடிந்து உள்ளது. 

இந்த ஆண்டு நாட்டுமாடு இனத்தை சேர்ந்த காளைகள் மட்டுமே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, அலங்காநல்லூரைத் தொடர்ந்து, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. வாடி வாசல் அமைக்கும் பணிகளும் அங்கு நிறைவுபெற்றன.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்று மதுரையில் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அவர் அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.