பாஜகவிலிருந்து மதன் ரவிச்சந்திரன் நீக்கம்! கே.டி.ராகவன் குறித்த ஆபாச வீடியோவை வெளியிட்டதால் பாஜக தலைமை நடவடிக்கை..
கே.டி. ராகவன் விவகாரத்தல் ஆபாச வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர், பாஜகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளனர்.
பாஜகவில் பெண்களுக்கு பாலியல் புகார் அளிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் அதை பாஜகவை சேர்ந்த யூடிபர் மதன் ரவிச்சந்திரன், வெளிச்சம் போட்டு காட்டினார்.
அதாவது, நேற்று வரை பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்த கே.டி. ராகவன் மீது பாலியல் புகார் தொடர்பான வீடியோ ஆதாரத்தை, அதே கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் நேற்றைய தினம் வெளியிட்டார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கே.டி. ராகவன், வேறு வழியின்றி “தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக” நேற்று மாலை அறிவித்தார். இந்த விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக மதன் மற்றும் வெண்பா ஆகிய இருவரும் பாஜகவில் இருந்து அதிரடியாக தற்போது நீக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக, பாஜக மாநில பொது செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்து உள்ளனர்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
அதே நேரத்தில், “பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து நீக்கப்படுகிறார்கள்” என்றும், அவர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
“கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, மதன் ரவிச்சந்திரனின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல், கடந்த ஆண்டு கே.டி. ராகவனுக்கு நெருக்கமானவர் என்று கட்சியினரால் அறியப்படும் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன், கடந்த காலங்களில் பாலியல் புகாரில் சிக்கினார். அவர், மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார்.
மேலும், “கலிவரதன் தங்களை ஏமாற்றிவிட்டதாக மேலும் 2 பெண்கள் சாபம் விடும் ஆடியோவும் வெளியானது. இந்த விவகாரத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்த பெண்களை கட்சியிலிருந்து அந்த கட்சியின் தலைமை நீக்கி நடவடிக்கை எடுத்தது. அது போலவே, தற்போதும் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.