தமிழகம் வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
நைஜீரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டநிலையில், மரபணுவில் மாற்றம் உள்ளதால் ஒமிக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்றைய தினம் 142.5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு கலன் ரூ.2.5 கோடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது.
அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தட்டுப்பாட்டை போக்க எடுத்த நடவடிக்கைகளை அனைவரும் அறிவார்கள். முந்தைய ஆட்சியில் தமிழகத்தில் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு இருந்தது.
ஆனால் தற்போது தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 1,310 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் எந்த பேரிடரையும் எதிர்கொள்ள முடியும்.
இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில் 241 ஆக்சிஜன் ஆலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் 50 வயதைக் கடந்தவர்களுக்கு கட்டாய புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோன்று முதுகு தண்டுவட பிரச்சனையால் நீண்ட நாளாக படுத்து இருப்பவர்களுக்கு புதிய படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் மட்டும் 10 பிரத்யேக படுக்கை வசதி இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 61 ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரங்கள் இருந்தன.
தற்போது அதன் எண்ணிக்கை 79 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
இன்றைய தினம் கூடுதலாக 20 ஆர்.டி.பி. சி. ஆர். எந்திரங்கள் அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் ஒன்று இங்கு திருச்சி அரசு மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகில் 50 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் 41 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கும், அவர் தொடர்புடைய அவர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் எஸ்.ஜீன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்களின் மாதிரிகள் பெங்களூரு மருத்துவமனைக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தற்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு பரிசோதனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரிய வரும்.
ஆனால் ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 29 மாதிரிகளில் 4 மாதிரிகள் சாதாரண டெல்டா வகை என திரும்ப வந்து விட்டது.
திருச்சி அரசு மருத்துவமனை ஒமிக்ரான் வார்டில் சிகிச்சை பெறும் 4 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்படவில்லை. ஏழு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் செலுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை” இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.