3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், திடீரென்று திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டு, இளம் பெண்ணை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாகிருஷ்ணன் என்பவரது இளைய மகள் 19 வயதான அபர்ணா, கோவை வ.உ.சி. பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

அதே நேரத்தில், கல்லூரியில் படிக்கும் பொழுதே இளம் பெண் அபர்ணா, தனது  உறவினரான கோவை காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் 21 வயதான விஷ்ணுவை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் மனசார விரும்பி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில், இவர்களது காதல் விவகாரம், இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனால், இரு வீட்டாரின் பெற்றோரும் பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி அன்று, இரு வீட்டாரும் கோவையில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று தங்களது பிள்ளைகளின் திருமணம் பற்றி பேசி உள்ளனர்.

அப்போது, விஷ்ணு சரியாக பிடிகொடுக்காமல் பேசியதாகத் தெரிகிறது. இதனால், 19 வயதான இளம் பெண் அபர்ணாவின் தந்தை கோபாலகிருஷ்ணன், “எனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி” விஷ்ணுவிடம் கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு விஷ்ணு “நான், சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்றும், எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்” என்றும் கூறி, அதனைத் தட்டிக்கழித்து உள்ளார்.

இதன் காரணமாக, இளம் பெண்ணின் தந்தை கோபாலகிருஷ்ணனுக்கும், காதலன் விஷ்ணுவிற்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. 

இதில் கடும் ஆத்திரமடைந்த விஷ்ணு, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து காதலியின் தந்தையான கோபாலகிருஷ்ணனைத் தாக்க முற்பட்டு உள்ளார். 

அப்போது, அதனைத் தடுக்க வந்த கோபாலகிருஷ்ணனின் இரு மகள்களையும் விஷ்ணு, கத்தியால் குத்தி உள்ளார். 

இதில், காதலி அபர்ணாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக படுகாயமடைந்த அபர்ணாவை மீட்ட உறவினர்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும், இது குறித்து இளம் பெண்ணின் தந்தை கோபாலகிருஷ்ணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த 
போலீசார், காதலன் விஷ்ணு மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பிறகு, காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.