தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு..
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இருக்கும் நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதாவது, தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
ஆனால், இந்தப் பதவியிடங்களுக்கு சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்றைய தினம் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதனால், பொது மக்கள் யாவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதே போல், வாக்குப் பதிவுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படு வருகின்றன.
இந்த தேர்தலில் சுமார் இரண்டரை கோடி வாக்காளர்கள் இன்றைய தினம் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர்.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள இந்த வாக்குப் பதிவானது, இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
அத்துடன், இன்று மாலை 5 மணி முதல், 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால், இதர வாக்காளர்கள் மாலை 5 மணிக்குள் தங்களுக்கான வாக்குச்சாவடிக்குள் வந்து வாக்கினை செலுத்த வேண்டும் என்றும், தமிழக வாக்காளர்களை தமிழக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இதனால், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவானது, குறிப்பிட்ட ஒரு சில இடங்களைத் தவிர விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொது மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
குறிப்பாக, இன்று நடைபெற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குான வாக்குகள் அனைத்தும், வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் பாதுகாப்புப் பணியில் 98 ஆயிரம் காவல் துறையினரும், 12 ஆயிரத்து 300 ஊர்க்காவல் படையினரும் தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீத வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
முக்கியமாக, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.