ஐ.பி.எல். போட்டியில் கலக்கும் இளம் வீரர்கள்... கோடிகளைக் கொட்டி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக எதிர்பாராத அளவில் இளம் வீரர்களின் ஊதியத்தை கோடிகளில் கொட்டிக் கொடுத்து ஐபிஎல் அணியினர் தக்கவைத்துள்ளனர்.
15-வது ஐபிஎல் சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை 8 அணிகளும் வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப் போகிறார்கள் என ஏற்கனவே கணிப்புகள் வெளியாகியிருந்தன.
பெரும்பாலும் இந்த கணிப்புகளை ஒத்தே அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலும் இருக்கிறது. எனினும் இதில் சில எதிர்பாராத விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. எதிர்பாராத சில இளம் வீரர்களை கோடிகளை கொட்டி அணிகள் தக்கவைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீரர்களை பற்றி இங்கே காணலாம்.
நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் இளம் வீரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்தது. இதில் குறிப்பாக வெங்டேஷ் ஐயருக்கு பிரமிக்க வைக்கும் வகையில் அதிக சதவீதத்தில் ஊதிய உயர்வு ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?.
ஆம் கடந்த சீசனில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. ஆனால் இந்தாண்டு அவர் ரூ. 8 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியின் 2-வது பாதியில் மட்டுமே விளையாடிய வெங்கடேஷ் ஐயர், கேகேஆர் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
2021 சீசனின் முதல் பாதியில் கொல்கத்தா அணி ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் விஸ்வரூபமெடுத்து திடீரென ஓப்பனிங்கில் இறங்கி கொல்கத்தா அணியின் தலையெழுத்தையே வெங்கடேஷ் ஐயர் மாற்றினார்.
வெங்டேஷ் ஐயர் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகாத அப்துல் சமாத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோரும் பெரும் ஊதிய உயர்வை பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சீசனில்தான் சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமாகியிருந்தார் உம்ரான் மாலிக். அதுவும் சன்ரைசர்ஸ் அணி முழுமையாக தோற்று ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு துளி கூட சாத்தியமில்லை என்ற நிலையில், பென்ச்சில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பளித்த போதுதான் உம்ரான் மாலிக் களமிறங்கினார்.
வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். உள்ளூர் போட்டிகளிலும் பெரிய ரெக்கார்ட் கிடையாது. விரல்விட்டு எண்ணும் வகையிலான உள்ளூர் போட்டிகளையே ஆடியிருக்கிறார். ஆனாலும் இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து தக்க வைத்திருக்கிறது. காரணம், இவரின் வேகம்.
இதே போல கடந்தாண்டு ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட அப்துல் சமாத் தற்போது ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவர்கள் இருவரையும் தக்கவைத்துள்ளது.
ஏன் ஆடும் லெவனில் எடுக்கப்படுகிறோம். ஏன் பென்ச்சில் இருக்கிறோம் என வீரருக்கே காரணம் தெரியாத அளவுக்கு குழப்பமான முடிவுகளை எடுக்கும் பஞ்சாப் அணியில் முட்டி மோதி தனக்கான நிலையான இடத்தையும் அர்ஷ்தீப் பிடித்திருந்தார். ஒரு தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளராக பவர்ப்ளே, டெத் என எங்கேயும் வீசும் பௌலராக மிரட்டியிருந்தார். 4 கோடி கொடுத்து அர்ஷ்தீப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைத்திருக்கின்றனர்.
சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என திறமையான பல வீரர்கள் போட்டியில் இருந்தனர். இந்நிலையில் யாஷஸ்வியை மட்டும் டிக் அடித்து தக்கவைத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. திறமையான இடதுகை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஜொலிக்கக்கூடியவர். தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படும்பட்சத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதனாலயே ராஜஸ்தான் அணியும் 4 கோடி கொடுத்து இவரை தக்கவைத்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் களம் கண்ட பஞ்சாப் கிங்ஸ் வீரர் மயங்க் அகர்வாலுக்கு கடந்தாண்டு ரூ.1 கோடி தான் சம்பளமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு ரூ.12 கோடிக்கு அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சனுக்கு ரூ.3 கோடிக்கு சம்பளமாக இருந்தது. தற்போது ரூ.14 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். சிஎஸ்கே வீரர் ஜடேஜா ரூ. 16 கோடி சம்பளம் பெறவுள்ளார்.
கடந்த ஐபிஎல் 2021 தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்க்கு ரூ. 20 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது. அதே சீசனில் அந்த அணிக்காக சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை வென்றார், மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவரது சிறப்பான ஆட்டத்தால், ஐபிஎல் தக்கவைப்பு 2022-லில் சென்னை அணி ரூ.6 கோடி கொடுத்து கெய்க்வாட்டை தக்கவைத்துள்ளது.