அடி தூள்.. குழந்தை எழுத்தாளர்களுக்கு “கவிமணி விருது” தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!
“18 வயதுக்கு உட்பட்ட சிறப்பு எழுத்தாளர்களுக்கு, கவிமணி விருது வழங்கப்படும்” என்று, சட்டப் பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
தொழிற் கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைச் சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் அப்போது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது அதிமுக ஆட்சிக்குப் பிறகு திமுக ஆட்சி நடத்தி வரும் நிலையில் திமுக அரசும், “அரசு பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை மேம்படுத்துவோம்“ என உறுதியேற்று இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாகவே, “தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் படி இன்றைய தினம் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதற்கான சட்ட முன்வடிவை முன்மொழிந்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.
அதாவது, “தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுடன் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் போட்டியிடும் சூழல் இருப்பதால் இந்த மசோதாவை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வதாக” அவர் கூறினார்.
இந்த மசோதாவால், மாணவர்களுக்கு பொறியியல், கால்நடை, மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட படிப்புகளில் உள் ஒதுக்கீடு கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு 'கவிமணி விருது' வழங்கப்படும்" என்று, அறிவித்தார்.
“இப்படியாக, ஆண்டு தோறும் சிறந்த 3 சிறுவர் எழுத்தாளர்களைத் தேர்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் சான்றிதழுடன் இந்த ‘கவிமணி விருது’ வழங்கப்படும்” என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார்.
மேலும், “சிறந்த ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
அத்துடன், “கற்றல், கற்பித்தல் இயக்கத்தில் பங்களிக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் கருத்தியல் ரீதியாக தலையிட முற்பட்டால் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” என்றும், அமைச்சர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் என்றும். நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களைத் தேடும் வசதி ஏற்படுத்தப்படும்” என்றும், சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.