“அல்லாஹு அக்பர்” என மாணவி முழங்கியதன் பின்னணியில் தூண்டுதல் எதுவும் உள்ளதா?” என்று, கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சந்தேகத்தை கிளப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம், இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கடும் அதிர்ச்சிகைளையும், பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.
அதாவது, நேற்றைய தினம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா கல்லூரியில் ஒரு இஸ்லாமிய மாணவி ஒருவர், வழக்கம் போல் பர்தா அணிந்து கொண்டு, கல்லூரிக்கு வந்து உள்ளார். அப்போது, காவித் துண்டு அணிந்திருந்த 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கு வந்து அந்த இஸ்லாமிய மாணவியை திடீரென்று சூழ்ந்துக்கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் எழுப்பி, அந்த மாணவியை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும் பதிலுக்கு “அல்லாஹு அக்பர்” என்று, முழங்கி உள்ளார். ஆனாலும், அந்த பெண்ணிடம் “ஜெய் ஶ்ரீராம்” என்று, முழக்கமிட்டபடி, தோழிலில் காவி துண்டு போட்ட மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் அந்த மாணவியை சூழந்துகொண்டு, “ஜெய் ஶ்ரீராம்” என்று, முழக்கமிட்டபடியே பின் தொடர்ந்து ஓடி வந்தனர். அப்போது, அந்த கல்லூரியின் ஆசிரியர் ஒருவர், அந்த மாணவர்களை தடுத்து அந்த இஸ்லாமிய மாணவியை பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தான், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த உணர்ந்த அந்த மாநில அரசு, “ பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து” அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்றைய தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் தான், கர்நாடகாவின் மண்டியாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வந்த இஸ்லாமிய மாணவி, ““அல்லாஹு அக்பர்” என முழங்கியதை, கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ், “ 'முஸ்கன் அல்லாஹ் ஹூ அக்பர்' என முழங்கினார் என்றும், ஆனால், அந்த மாணவியன் பின்னால் மாணவர்களே இல்லாத போது, அவர் எதற்காக அவ்வாறு முழங்க வேண்டும்?” என்றும், கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும், பேசிய அவர், “ஒரு கல்லூரியில் அந்த முழக்கத்தை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன? அங்கு முழக்கத்திற்கான அவசியம் என்ன? மாணவி தூண்டப்பட்டாரா? அல்லா ஹூ அக்பர் அல்லது ஜெய்ஸ்ரீ ராம் எந்த கோஷமாக இருந்தாலும் அதை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்றும், பேசினார்.
கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷின் இந்த பேட்டி வெளியான நிலையில், “அந்த மாணவியன் பின்னால் மாணவர்களே இல்லாத போது, அவர் எதற்காக அவ்வாறு முழங்க வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, “அப்படியென்றால், அந்த மாணவியை சூழ்ந்து “ஜெய் ஶ்ரீராம்” என்று, முழக்கமிட்டபடி, அந்த மாணவியை துரத்திக்கொண்டு வந்தது யார்?” என்றும், அப்படியென்றால் அந்த இஸ்லாமிய பெண்ணை சுற்றி நின்றதாக காட்டப்படுவது CG ஒர்க்கா?” என்றும், மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனால், கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷின் இந்த பேட்டி, மீண்டும் குழப்பதையும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.