பாமக செயலாளர் தேவமணி ஓட ஓட விரட்டி படுகொலை! வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..
ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாமக மாவட்ட செயலாளரை, கொலையாளிகள் துரத்துவதும், படு கொலை செய்து விட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளன.
காரைக்காலில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த 53 வயதான தேவமணியின் வீடானது, அங்குள்ள திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகே அமைந்து உள்ளது.
அதே மெயின் சாலையில் இவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் அமைந்து உள்ளது.
இந்த சூழலில் தான், நேற்று இரவு 10.20 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டுக்கு ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தேவமணி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென்று தேவமணி மீது பாய்ந்து உள்ளனர். இதனால், பதறியடித்துக்கொண்டு அவர் தனது வீடு நோக்கி ஓட தொடங்கி உள்ளார்.
ஆனாலும், விடாமல் பின்னாடியே ஓட ஓட விரட்டிச் சென்ற அந்த கும்பல், அவரது வீட்டுக்கு அருகில் வழி மறித்த நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக தேவமணியை வெட்டித் தள்ளி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
தேவமணியின் உடலில் தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயம் இருந்ததால், அவர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தேவமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக திருநள்ளாறு காவல் ஆய்வாளர் லெனின் பாரதி மற்றும் அவர் தலைமையிலான போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில், “நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்திருக்கலாம்” என்று, போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
அத்துடன், “தேவமணி மீது ஏற்கனவே பலமுறை கொலை முயற்சி நடைபெற்று உள்ளது” என்றும், கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான், ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாமக மாவட்ட செயலாளரை, கொலையாளிகள் துரத்துவதும், படு கொலை செய்து விட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இது, திருநள்ளாறு பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, திருநள்ளாறு பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.