“காவல்துறை விசாரணை என்று என்னைத் துன்புறுத்துகின்றார்கள்” நீதிமன்றத்தில் கமல்ஹாசன்..
By Aruvi | Galatta | 02:30 PM
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில், காவல்துறை விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.
சென்னை நசரத்பேட்டையில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற “இந்தியன்-2” படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில், கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் உள்பட மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினர்.
இது தொடர்பாக, நடைபெற்ற விசாரணையில், இயக்குநர் ஷங்கரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானார்.
அப்போது, விபத்து நடந்தது தொடர்பாகவும், படப்பிடிப்பின்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கமல்ஹாசனிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், விளக்கம் கேட்டுத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில், காவல்துறை விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.
அந்த புகாரில், “3 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக நடித்துக் காட்டும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசரா் தன்னிடம் வற்புறுத்துவதாக” குற்றம்சாட்டி உள்ளார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.