பிறந்தநாளில் காலமானார் ஜெ.அன்பழகன்! அரசியல் முதல் உயிரிழப்பு வரை கடந்து வந்த பாதை..
By Aruvi | Galatta | Jun 10, 2020, 11:29 am
ஜெ.அன்பழகன் தனது 62 வது பிறந்த நாளான இன்று காலமானார். அரசியல் முதல் உயிரிழப்பு வரை கடந்து வந்த பாதை என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
திமுக தலைமைக்கு அடுத்து திமுக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட யாரிடமும் இல்லாத ஒரு தனித்துவமான தன்மை ஜெ.அன்பழகனிடம் இருந்தது. அது வேறொன்றுமல்ல, “தைரியம்” தான்.
திமுக பொதுக்குழுவாக இருக்கட்டும், செயற்குழுவாக இருக்கட்டும், அது கட்சிக்கு முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒரு கருத்தாக இருந்தால், அதை யாருக்கும் அஞ்சாமல், மிக தைரியமாக எல்லோர் முன்னிலையிலும் சொல்லக்கூடிய துணிச்சல் மிக்கவர் ஜெ.அன்பழகன்.
அதே நேரத்தில், தலைவர் கலைஞர் சொன்ன ஒரு விசயமாக இருந்தால், அதை வேத வாக்காக எடுத்துச் செய்து முடிக்கும் போர் குணமும் அவரிடமிருந்து. இதனாலேயே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் ஜெ.அன்பழகன்.
ஜெ.அன்பழகன், மாவட்டச் செயலாளராகக் கூட இல்லாத நேரத்தில் அவர் ஒருமுறை போராட்டத்தில் ஈடுபட்டபோது சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, ஜெ.அன்பழகன் உடனடியாக விடுவிக்கக்கோரி நேரடியாகவே களத்தில் இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, ஒட்டுமொத்த தமிழக திமுகவே ஜெ.அன்பழகனை திரும்பிப் பார்த்தது. அந்த அளவுக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆகும் முன்பே, திமுகவில் தனது செயல்பாடுகளால் பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்.
அப்போது, யார் இந்த அன்பழகன்? என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஜெ.அன்பழகன், வேறு யாருமல்ல, பழக்கடை ஜெயராமனின் மகன் தான் ஜெ.அன்பழகன், என்று தெரியவந்தது. தந்தை ஜெயராமனின் திமுக மீது அதீத பற்றுக்கொண்டவர். அதே பற்று மகன் ஜெ.அன்பழகனிடமும் காணப்பட்டது. இதனால், திமுகவில் தன்னை படிப்படியாக ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இதனால், தொகுதி செயலாளராகத் தனது முதல் பொறுப்பை திமுகவில் ஏற்றார் ஜெ.அன்பழகன். அதன்பிறகு சைதை சித்துவுக்குப் பிறகு, திமுகவின் மாவட்டச் செயலாளர் ஆனார் ஜெ.அன்பழகன்.
அதன்பிறகு, கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலின்போது, சென்னை தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் சுலோச்சனா சம்பத்தை 2,499 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இதனால், 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தி.நகர் தொகுதி எம்.எல்.ஏவாகவும் அவர் பதவி
வகித்தார். இதனால், திமுகவில் அவரது செல்வாக்கு மேலும் உயரத்தொடங்கியது. அதுமுதல், திமுகவின் அசைக்க முடியாது தூணாக மாறினார் ஜெ.அன்பழகன்.
பிறகு, கடந்த 2011 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற ஜெ.அன்பழகன்,
சட்டப்பேரவையில் துணிச்சலாகக் கேள்விகளைக் கேட்க கூடியவர் என்றும், மிகவும் தைரியமான திமுக மாவட்டச் செயலாளர் என்றும் அறியப்பட்டார்.
குறிப்பாக, திமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
அரசியல் மட்டுமில்லாமல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஜொலித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “ஆதி பகவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும், “யாருடா மகேஷ்'” படத்திற்கு வினியோகஸ்தராகவும் ஜெ.அன்பழகன் திகழ்ந்தார்.
அதிலும் குறிப்பாக, கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த “தலைவா” படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது. அப்போது, அந்தப் படக் குழுவினர் விரும்பினால், தன்னுடைய “அன்பு பிக்சர்ஸ்” நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்றும் ஜெ.அன்பழகன், மிகவும் தைரியமாக அறிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்போதைய அதிமுக அரசு, பல்வேறு நிபந்தனைகளுடன் படத்தை வெளியிட்டது.
மேலும், அஜீத் - விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க, அன்பு பிக்சர்ஸ் சார்பில் நான் தயாராக இருப்பதாக ஜெ.அன்பழகன் கூறினார்.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தமிழகத்தில் பரவத் தொடங்கி கொரோனா வைரஸ் தொற்றால், முடங்கி உள்ள ஏழை எளிய மக்களுக்கு திமுக நிர்வாகிகள் உதவ வேண்டும் என்று திமுக தலைமை கேட்டுக்கொண்டது. இதனால், ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜெ.அன்பழகன், அந்த உடல் நிலை குறைவோடும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வந்தார்.
அப்போது, அவருக்கு எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று பரவியது. இதனால், கடந்த 2 ஆம் தேதி முதல் மூச்சுத் திணறல் காரணமாகக் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அன்பழகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கும் வகையில் வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் உடல் நிலையில் சீராக வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில், மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதனால், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார் மு.க ஸ்டாலின்.
இந்நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு ஜெ.அன்பழகனின் உடல் ஒத்துழைக்காததால், அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். ஜெ. அன்பழகன் கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 தேதி பிறந்தார். அவரது உயிரும் அதே நாளான ஜூன் 10 ஆம் தேதியான இன்று இந்த உலகை விட்டுப் பிரிந்துள்ளது ஒட்டுமொத்த திமுகவினரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.