“இந்தியா எந்த ஒரு தனி நபருக்கும், எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது இல்லை” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சிந்தன் ஷிவிர் எனும் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியானது, தற்போது மொத்தமாகவே 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி தழுவியது.
இந்த நிலையில் தான், “எதிர் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து” ஆலோசனை நடத்த, 3 நாள் காங்கிரஸ் மாநாடு கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.
இந்த மாநாட்டில் “புதிய புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு, புதிய புதிய வியூகம் வகுக்கப்படும் என்றும், இந்த மாநாட்டில் இந்தியாவின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் பிரச்சினைகள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை, காஷ்மீர் தொகுதி மறுவரையறை, மத்திய - மாநில உறவு நிலைகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து” இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு” வருகின்றன.
முக்கியமாக, “ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்” என்கிற புதிய திட்டத்தை காங்கிரஸ் கட்சியில் கொண்டு வந்து, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்” என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தான், 3 நாள் காங்கிரஸ் மாநாட்டில், இன்று 3 வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டின் 3 வது நாளான இன்று, “ஒரு நபருக்கு ஒரு பதவி மற்றும் ஒரு குடும்பம், ஒரே தேர்தல் சீட்டு” என்கிற புதிய விதியையும் அக்கட்சியினர் ஏற்றுக்கொண்டனர்.
அதன் படி, “காங்கிரஸ் கட்சியில் ஒரே குடும்பத்தின் 2 வது உறுப்பினர் அல்லது 3 வது நபர் தேர்தலில் போட்டியிட விரும்பினால், அந்த நபர் 5 ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என்றும், புதிய விதிமுறைகள் வகுப்பட்டு உள்ளன.
எனினும், இந்த புதிய விதிமுறையின்படி, காந்தி குடும்பத்தினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய 3 பேரையும் போட்டியிட தகுதி உடையவர்களாக காட்டுகிறது. இந்த நிலையில் தான், அந்த புதிய விதியை காங்கிரஸ் கட்சி தற்போது ஏற்றுக்கொண்டு உள்ளது.
மேலும், 3 நாள் காங்கிரஸ் மாநாட்டில், கடைசி நாளான இன்று உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியா, எந்த ஒரு தனி நபருக்கும், எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல” என்று, சூளுரைத்தார்.
“இங்கு 2 வகையான இந்தியா உள்ளது” என்றும், ராகுல் சுட்டிக்காட்டினார்.
“அதில் ஒன்று கருத்துகளை பகிரும் இந்தியா, மற்றொன்று வன்முறையில் ஈடுபட தயாராகும் இந்தியா” என்றும், மறைமுகமாக தாக்கி பேசினார்.
அத்துடன், “நமது அரசியல் அமைப்பின் படி, மாநிலங்களின் தொகுப்பு தான் இந்தியா என்றும், அனைத்து தரப்பினா் கருத்துகளையும் கேட்கும் கட்சி காங்கிரஸ் என்றும், அது தான் அதன் டி.என்.ஏ.” என்றும், ராகுல் சூளுரைத்தார்.
குறிப்பாக, “காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இளைஞா் இடம் பெற வேண்டும்” என்றும், ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
முக்கியமாக, “மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர வைக்க வேண்டியது நமது பொறுப்பு என்றும், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இதை செய்ய முடியும்” என்றும், ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இறுதியாக, “வெகுஜன மக்களுடனான நமது தொடர்பு முறிந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், காங்கிரசால் தான் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது மக்களுக்குத் தெரியும்” என்றும், ராகுல் காந்தி, பேசினார்.