ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம் போராட்ட இளைஞன் சென்னையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டி!
ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம் உள்ளிட்ட பல சமூக போராட்டங்களில் முன்னாடி நின்ற இளைஞன் ஒருவர், சென்னையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை இனி வரக்கூடிய தமிழ் சமூகம் அவ்வளவு எளிதாக மறந்துவிடாது. ஒரு சில இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அந்த போராட்டம் மண், பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பொது மக்கள் பிரச்சனையாக வெடித்து, உலகம் முழுவதும் எதிரொலித்தது.
அதே போல், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு சமூக ஆர்வளர்களும், நிறைய இளைஞர்களும் போராட்ட களத்தில் குதித்தனர். இதனால், இந்த போராட்டம், இந்திய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படியாக, தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு இளைஞர்களும் போராட்ட களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைக்காக முன் நின்றதை கடந்த கால தமிழகம் கண்டிருக்கிறது.
அப்படியாக, மக்கள் பிரச்சனையில் போராட்ட களத்தில் தங்களை முன்நிறுத்திய பலரும் சமீப காலமாக தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக களம் கண்டும் வருகின்றனர்.
அந்த வகையில் தான், தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, சென்னை மாநகராட்சி 104 வது வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு, ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம் உள்ளிட்ட பல சமூக போராட்டங்களில் முன்னாடி நின்று போராடி, பலராலும் அறியப்பட்ட இளைஞன் அப்துல் ஜலீல், இந்த தேர்தலில் தற்போது சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போதும், இந்த கொரோனா பெருந்தொற்றின் போதும், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த அப்துல் ஜலீல், இந்தாண்டு மட்டும் 23 குழந்தைகள் படிக்க உதவி செய்திருக்கிறார் என்கிற தகவல்களும் தெரிய வந்திருக்கின்றன.
இப்படியாக, “கடந்த 13 ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வரும் அப்துல் ஜலீல், கடந்த 6 ஆண்டுகளில் 63 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காக உதவி இருக்கிறார்” என்கிற அவரைப் பற்றிய தகவல்களை, அவரோடு போராட்ட களத்தில் நின்ற பலரும் கூறுகிறார்கள்.
அதன் படி, சென்னை மாநகராட்சி 104 வது வார்டு பகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அப்துல் ஜலீல், அந்த பகுதி மக்களிடையே தான் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்தும், சமூக பிரச்சனைகள் குறித்தும் எடுத்துக்கூறி, தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி, தனது சின்னமான பூப்பந்து மட்டை சின்னத்தில் அவர் தற்போது வாக்கு சேகரித்து வருகிறார்.
அத்துடன், அப்துல் ஜலீல் அப்பகுதி மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர் என்றாலும், அவர் தற்போது அளித்து வரும் “ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா, மகளிர் சுயத்தொழிலுக்கு அரசிடமிருந்து நேரடி கடன் உதவி, தரமான சாலைகள், மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் யாவும்” இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போலவே நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியும், ஆன்லைன் மூலமாக பேசியும் வாக்கு சேகரித்து வரும் அப்துல் ஜலீல் பேசும் போது, “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருமங்கலம் பகுதி தான். கடந்த 3 தலைமுறையாக நாங்க இங்க தான் இருக்கோம். நான் படிக்காதவன் என்பதால், படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்கள் படிக்க வைக்கிறேன் என்றும், இதையே என்னுடைய தேர்தல் வாக்குறுதியாகவும் உங்களுக்கு கொடுத்துள்ளேன்” என்றும், கூறியுள்ளார்.
அதே போல், “சமூக ஆர்வலரா பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த நான், என் மக்களின் தேவைகளை அறிந்து உதவி செய்யவே நான் இப்போது அரசியல் களத்தில் இறங்கி இருப்பதாகவும்” தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஜலீல், “சென்னையின் 104 வது வார்டை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக மாற்றிகாட்டுவேன்” என்றும், நம்பிக்கைத் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம் உள்ளிட்ட பல்வேறு சமூக போராட்டங்களில் முன்னாடி நின்ற இளைஞன் ஒருவர், சென்னையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.