வருமான வரி விவகாரம்.. நடிகர் ரஜினிக்கு ரூ.66 லட்சம் அபராதம் விதிக்க முடிவு!
By Aruvi | Galatta | 11:12 AM
வருமான வரி விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்தபோது, தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, வருமான வரித்துறையிடம் நடிகர் ரஜினிகாந்த் நஷ்ட கணக்குக் காட்டிய சம்பவம் கடந்த வாரம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதாவது, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
அதன்படி, 2002-2003 ஆம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் பணத்தை, தெரிந்தவர்களுக்குக் கடன் கொடுத்ததாகவும் கூறினார். அதற்காக, வட்டியாக 1.19 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும், அதற்கான வரியைத் தான் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 2004 - 2005 ஆம் நிதியாண்டில் 1.71 கோடி ரூபாய் வாராக்கடனாக நடிகர் ரஜினி கணக்குக் காட்டியுள்ளார். அதன்படி, தனக்கு 33.93 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் நடிகர் ரஜினி கணக்குக் காட்டினார்.
இதனால், வாராக்கடனைக் கணக்குக் காட்டுவதற்காகவே, ரஜினி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
அதன்படி, 2002-2003 ஆம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003 - 2004 ஆம் நிதியாண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004 - 2005 ஆம் நிதியாண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராத தொகையை எதிர்த்து, வருமான வரித்துறையின் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நடிகர் ரஜினிகாந்த் முறையீடு செய்தார்.
இதனையடுத்து, அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவையும் ரத்து செய்து, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில், வருமான வரித்துறையில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவான வரி தொடர்பான வழக்குகளில் மேல்முறையீடு தேவையில்லை என்றும், ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்தது.
இதனால், நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கைத் திரும்பப்பெறுவதாக வருமான வரித்துறை, நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில், நடிகர் ரஜினி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ததை ஏற்றுக்கொள்ளாத வருமான வரித்துறை அதிகாரிகள், அவர் கடன் கொடுத்த பணத்திலிருந்து பெறப்படும் வட்டி பணம், பிற வழிகளில் பெறப்படும் வருவாய் என்றுதான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, அவரது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நஷ்டம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், வருமானத்தை அவர் மறைத்திருக்கலாம் என்பதாலும், ரஜினிக்கு முதலில் விதித்த அபராத தொகையை
வருமான வரித்துறை அதிகாரிகள் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, குறைந்தபட்ச அபராத தொகையாக 66.22 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 1.98 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “நான் முறையாக வருமான வரி செலுத்தும் நபர். சட்டவிரோதமாக எந்த செயலும் செய்யவில்லை” என்று கூறினார்.
ஆனால், இன்று வருமான வரி விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.