வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் ‌‌‌‌‌‌‌‌‌தமிழகத்தின் சில மாவட்டங்களில், இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதே போல், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  மிதமானது மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. 

அத்துடன், மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தான், “மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக” இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

“இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஷ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அந்த பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் வங்கக் கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், இந்த காற்றழுத்தம் மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக, நாளை முதல் 4 நாட்களுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதே போல், வங்கக்கடல் பகுதியில் மத்திய வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி, ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றானது, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால், வங்க கடல் பகுதிக்கு 
மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு தகுந்த எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறும்போது, “தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சுட்டிக்காட்டினார்.

“சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும், மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது” என்றும், தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லியின் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அங்கு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.