ஐதராபாத் என்கவுன்டரும்.. பிரபலங்களின் கருத்தும்..! - SPECIAL ARTICLE
By Arul Valan Arasu | Galatta | 03:37 PM
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம்..
மாயாவதி, முன்னாள் முதலமைச்சர் (உத்தரப் பிரதேசம்)
“பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி போலீசார், ஐதராபாத் போலீசார் போல உத்வேகத்துடன் செயல்படவேண்டும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் துரதிர்ஷ்டவசமாகக் குற்றவாளிகள் மாநில விருந்தாளிகளைப் போல் நடத்தப்படுகிறார்கள்”
நிர்பயா தயார் ஆஷா தேவி
“குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தான் சரியான முடிவு. தெலங்கானா போலீசார் சிறப்பான பணியைச் செய்துள்ளனர்!”
சாய்னா நேவால், இந்திய பேட்மின்டன் வீராங்கனை
“சிறந்த செயலை புரிந்திருக்கும் ஹைதராபாத் காவல்துறைக்கு எங்களது வணக்கங்கள்!”
ஜுவாலா கட்டா, பேட்மிண்டன் வீராங்கனை
“தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் எதிர்காலத்தில் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களை தடுக்குமா? எந்த ஒருவரின் சமூக நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவராக இருந்தால், இதுபோன்று அந்த குற்றவாளிகளும் நடத்தப்படுவார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் விவேக்
“தங்கையின் ஆத்மா சாந்தியடையும். இதுபோன்ற எண்ணம் கொண்டோருக்கு இது ஒரு பாடமாக அமையும். போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு பெரிய சல்யூட்!” என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
கனிமொழி எம்.பி. திமுக
“4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது எல்லோருக்கும் நியமான முடிவு என்று தான் தோன்றும். இதை மறுக்கவில்லை. இது பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வு தருகிறது. அதே நேரத்தில், என்கவுன்ட்டர் தான் இதற்குத் தீர்வா எனவும் கேள்வி எழுகிறது.”
பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக
“என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதை நல்ல செயலாகப் பார்க்கிறேன். இதேபோன்று கடினமான தண்டனையைக் குற்றவாளிகளுக்குத் தர வேண்டும்”
பாலபாரதி, சி.பி.எம்.
“4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது, குற்றத்தைக் குறைப்பதற்கான தீர்வாக இது இருக்காது”
விஜிலா சத்தியானந்த், ராஜ்யசபா எம்.பி. அதிமுக
“குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்; என்கவுன்ட்டர் சம்பவம் பாலியல் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இது மாதிரியான சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க இது முதல் படி!”
வானதி சீனிவாசன், பாஜக
“தெலங்கானாவின் பெண் மருத்துவர் விவகாரத்தில், நீதித்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம்”
விஜயதாரணி, காங்கிரஸ்
"பெண்களுக்கு ஆதரவாக இறைவனே வழங்கிய தீர்ப்பாக இதைக் கருதுகிறேன். சரியான நடவடிக்கைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!"
அருள் மொழி, வழக்கறிஞர்
“4 பேர் என்கவுன்டர் என்பது, சட்டத்திற்குப் புறம்பான தண்டனையாகக் கருதுகிறேன்”
கருணாநிதி, ஓய்வு பெற்ற தமிழகக் காவல்துறை அதிகாரி
“4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டது என்பது.. இந்த தண்டனைக்குத் தகுதியானவர்கள் தான் அவர்கள்!”
கன்யா பெண்கள் அமைப்பு
“4 பேர் என்கவுன்டர் | இன்று தீபாவளி போல் உள்ளது!”
கொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் தந்தை
“ குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதால், என் மகளின் ஆத்மா சாந்தியடையும். தெலங்கானா அரசுக்கும், காவல்துறைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்”
கொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் தங்கை
“குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளது மூலம், என் அக்காவின் இறப்பிற்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும், இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்”