‘கடந்த 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’ என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் கணிசமான அளவுக்கு மழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களில் சற்று மழை குறைந்தாலும் டெல்டா மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் மழைப்பொழிவு அதிகரித்தபடி உள்ளது. 

மேலும் தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் தொடர்ச்சியாக 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. 

சென்னை வாழ் மக்களால் யாராலும் மறக்க முடியாத, பெரும் வெள்ளம் ஏற்பட்ட 2015-க்குப் பிறகு கடும் மழை, வெள்ளத்தை, சென்னை மாநகரம் தற்போது சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

h1

கடந்த 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்துவிட்டதன் விளைவாக, சென்னையில் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதுவரை சென்னை சந்தித்திராத அவலத்தை அந்த வெள்ளம் கொண்டுவந்து சேர்த்தது. 

இதனால் அரசும், நிர்வாகமும் பாடம் கற்றுக்கொண்ட நிலையில், தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மராமத்துப் பணிகளை பெருநகர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

ஆனால், அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆனநிலையில் இதுவரை சந்தித்திராத அளவுக்கு கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னைப் பெருநகர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிநிலையில், அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தங்கள் பகுதியில் உள்ள மாமனக்கா ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்க கூடாது. வெள்ளம் வடிய அனுமதிக்கப்பட வேண்டும்.

தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகக் சாவதாகவும், மீதி நாள் தண்ணீரில் இறப்பதாகவும் நாட்கள் செல்கின்றன. இந்த மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் உத்தரவிட்டார். இன்னொரு பக்கம் இதே அமர்வு சென்னை வெள்ளம் தொடர்பான வழக்கையும் விசாரணை செய்தது.

h2

சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தொடர்பான மனுவை, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் மிதக்கிறது.

இந்த திட்டம் என்ன ஆனது? ஏன் வெள்ளம் ஏற்பட்டுள்ளது? 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது மாநகராட்சி. மேலும், 2015 பெருவெள்ளத்தில் சந்தித்ததைபோலத்தான் சென்னை மீண்டும் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்று கூறிய நீதிபதிகள், பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படும் இந்த நிலைமை, ஒரு வாரத்தில் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும், என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.