தஞ்சையில் ஹைடெக்காக பாலியல் தொழில் நடைபெறவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 19 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

தஞ்சை நகரின் சில முக்கிய பகுதிகளில் போலியான மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் கொடி கட்டி பறப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதனையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரம் பாலியல் தொழிலை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதில் தொடர்பு உடையவர்கள் குறித்த விபரங்களையும் சேகரிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்யும்படி, திருச்சி மத்திய மண்டல காவல் துறையின் உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி வல்லம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன், பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தென்னரசு ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் பாலியல் தொழில் நடைபெறும் இடங்கள் தொடர்ச்சியாகக் கண்டறியப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, தஞ்சை நகரின் முக்கிய பகுதியில் உள்ள வீடு மற்றும் மசாஜ் சென்டர்களில் தீவிர சோதனை செய்ததில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தரகர்கள் மூலமாக இளம் பெண்களைக் கொண்டு வந்து பாலியல் தொழில் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ரெய்டில் 19 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 39,080 ரூபாய் பணமும், 31 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அந்த 9 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன், இது போன்ற ரெய்டு நடவடிக்கைகள் தொடரும் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. 

இதனிடையே, தஞ்சை முழுவதும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த வெளிமாநில இளம்பெண்கள் 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.