“தீபாவளி வரை கன மழை வெளுத்து வாங்கும்” தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை..
“தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையான நவம்பர் 4 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும்” என்று, சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
“தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும், இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி, “தமிழகத்தில் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றும், கணிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா. புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தற்போது முதல் நவம்பவர் 2 ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை” விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதன் காரணமாக, “டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்றும், அவர் எச்சரித்து உள்ளார்.
அத்துடன், “கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்றும், அவர் கூறியுள்ளார்.
அதே போல், வரும் 3 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்பதால், அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், “தமிழகத்தில் உள்ள பிற கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்றும், அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
அதே போல், அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா. புவியரசன் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, இன்று முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கன மழை காரணமாக, நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.