கனமழையால் தருமபுரி அருகே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர். 

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேலும் வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று சென்னை அருகே தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடந்தது. சென்னை போன்றே, தருமபுரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. 

வ1

மழை காரணமாகவும் வெள்ளநீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும், தருமபுரி மாவட்டத்தில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது. 

கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோவை, சேலம், தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கண்ணூர் விரைவு வண்டி மாலை 6 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 3.30 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்திற்கு வரும்.

இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை கடந்து கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் வரும் வழியில் 45 கிலோ மீட்டரில் வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்துள்ளது. 

இந்தக் கற்களில் கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் இன்ஜின் உரசியதில் இஞ்சின் மற்றும் அடுத்த இரண்டு பெட்டிகள் தடம்புரண்டது. திடீரென நிகழ்ந்த சம்பவத்தின்போது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் பயங்கர சத்தம் கேட்டதில் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர்.

t2

ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டதால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த ரயில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வனப் பகுதி என்பதால், இந்தப் பகுதிகளில் வரும் ரயில்கள் மெதுவாகவே வருவதால், இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

சுமார் 4 மணி நேரமாக பயணிகளுடன் ரயில் வனப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சேலம் மார்க்கத்தில் வேறு இன்ஜின் வரவழைக்கப்பட்டு, பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது.

தடம் புரண்ட பெட்டிகளில் பயணம் செய்த 2,348 பயணிகளும் பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது சேலம் பெங்களூர் மார்க்கத்தில் சுமார் 4 மணி நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். தொடர் மழையால் இந்த கற்கள் சரிந்து விழுந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் சதி வேலையா என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழை வெள்ளத்தால் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.