சூதாட்டப் புகாரில் தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐ.பி.எல். அணிகளில் புகழ்பெற்ற அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகும். காரணம் அதன் கேப்டன் தோனி ஆவார். தமிழக மக்களின் அணிபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிப்போனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தல தோனி என்றே அறியப்படும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை அழைத்து வந்தனர்.

ஆரம்பத்திலிருந்து மற்ற போட்டிகளை விட ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க கிரிக்கெட் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டுவர். கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஐ.பி.எல். போட்டி மீது தனி ஆர்வம் உண்டு. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டி ஆரம்பித்த சில ஆண்டுகளில் சூதாட்ட பிரச்சினை எழுந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 

MS DHONI HIGHCOURT CHENNAI SUPER KINGS

அதே தொடரில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சூதாட்டப் புகாரில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2017 ஐ.பி.எல். போட்டி வரை இரண்டு அணிகளும் ஐ.பி.எல். விளையாட முடியாமல் போனது. அந்த சமயத்தில் அதில் இருந்த வீரர்கள் வேறு அணிகளில் விளையாடினர்.  தோனி புனே அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடினார்.

அதன்பிறகு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில்  தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், “தோனி தரப்பு இந்த மனுவில் பல தகவல்களை மறைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்ஸிங் செய்தது. சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பிருப்பதாக இடைத்தரகர் கிட்டி சாட்சியம் அளித்தது.

தோனியை காப்பாற்றும் நோக்கில் கிட்டியின் வாக்குமூலத்தை சி.பி.சி.ஐ.டி. மறைத்தற்கு முத்கல் கமிட்டி கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட பல விஷயங்களை மறைத்து தோனி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மேலும் தோனி மீது எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. கிரிக்கெட்டின் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே விவாத நிகழ்ச்சியை நடத்தினோம்.

MS DHONI HIGHCOURT CHENNAI SUPER KINGS

தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை. அது சூதாட்டத்தின் அடித்தளமாக மாறிவருகிறது. அதுபோலதான் சமீபத்தில் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கவே தோனி வழக்கு தொடர்ந்துள்ளாதால் அபராதத்துடன் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது “கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவரின் தனிமனித உரிமையை பாதிக்கக்கூடாது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் தோனி இழப்பீடு கேட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி தோனி தொடர்ந்த வழக்கில் தற்போது சாட்சி விசாரணை தொடங்கியுள்ள நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என கூறி சம்பத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சாட்சி விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என சம்பத் குமாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தோனி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15 ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.