பிரியங்கா காந்தியின் ஆடையைப் பிடித்து தடுத்து நிறுத்திய போலீஸ்! புகைப்படம் வெளியானதால் வெடித்தது சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட போலீஸ்!
By Aruvi | Galatta | Oct 05, 2020, 11:29 am
உத்தரபிரப் தேசத்தில் பிரியங்கா காந்தியின் ஆடையைப் பிடித்து இழுத்து போலீஸ் தடுத்து நிறுத்திய புகைப்படம் வெளியானதால் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அந்த மாநில போலீசார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் தனது கட்சியின் தொண்டர்களுடன் சென்றனர்.
அப்போது, அம்மாநில போலீசார் அவர்களைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தினர். முக்கியமாக, ராகுல் காந்தியை போலீசார் சட்டையைப் பிடித்துத் தள்ளியதாகக் கூறப்படும் நிலையில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அத்துடன், ராகுல் காந்தியுடன் வந்த பிரியங்கா காந்தியையும் அம்மாநில போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் மீண்டும் ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்களை டெல்லி - நொய்டா எல்லையில், அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ராகுல் காந்தி மற்றும் அவருடன் 4 நிர்வாகிகள் மட்டும் ஹத்ராஸ் செல்ல நொய்டா போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், தங்களுடன் வந்த அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளையும் ஹத்ராஸ் நோக்கி செல்ல அனுமதிக்கும்படி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னேறாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் தொடர்ச்சியாக, போலீசாரின் அனுமதி அளித்ததால், ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட 5 பேர் மட்டும் ஹத்ராஸ் சென்று பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில், டெல்லி - நொய்டா எல்லையில் முன்னதாக நடந்த தள்ளு முள்ளுன் போது, போலீசார் ஒருவர் பிரியங்கா காந்தி அணிந்திருந்த ஆடையான குர்தாவை, பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினால். இந்த புகைப்படம் நேற்றைய தினம் வெளியானது. இதனால், உத்தரப் பிரதேச போலீசார் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
“ஒரு தேசிய கட்சியின் முக்கிய பெண் தலைவரிடமே போலீஸ் இப்படி அத்துமீறி நடந்து கொள்கிறார்கள் என்றால், ஏழை எளிய மக்களிடம் இந்த போலீசார் எந்த அளவுக்குக் கடுமையாக நடந்துகொள்வார்கள்” என்று, சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கோபத்தையும் விமர்சனங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். இதனால், உத்தரப் பிரதேச போலீசாருக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், என்ன செய்வது என்று யோசித்த உத்தரப் பிரதேச போலீசார், வேறு வழியின்றி “பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவிப்பதாக நொய்டா போலீசார் தெரிவித்து உள்ளார்.
மேலும், “பிரியாங்கா காந்தியிடம் மன்னிப்பு கோருவதாகவும்” போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து நொய்டா மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும், நடந்த இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, உத்தரபிரப் தேசத்தில் நடந்த பாலியல் சம்பவத்திற்கு நீதி கேட்டு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கையில் ஒளியேந்தி இன்று பேரணி நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.