10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்!
By Aruvi | Galatta | Jun 03, 2020, 04:44 pm
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்” என்று உறுதி அளித்தார்.
அத்துடன், “தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
“மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருவதாகவும்” அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதேபோல், “பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்” அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும், 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
“http://dge.tn.gov.in” என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட் பெறலாம் என்றும், தனித்தேர்வர்களும் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 10 ஆம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.