தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

RN RAVI

 

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதன்படி இனி அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் மூலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இது தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அது நிறைவேறவில்லை. நீட் விலக்கு விவகாரத்தை திமுக அரசு பிரசாரத்தில் வலுவாக முன்னெடுத்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நீட் விலக்கு தொடர்பாகப் பல இடங்களிலும் பேசினார்.

தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நீட் பாதிப்பு குறித்த தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதை எல்லாம் அடிப்படையாக வைத்தே திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவை தயார் செய்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப். 13-ம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.

மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1-ம் தேதியே தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துவிட்டதாக ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் இது தொடர்பாக மாநில அரசு அமைத்திருந்த உயர்மட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆளுநர் விரிவாக ஆராய்ந்தார். நீட் தேர்வு வருவதற்கு முன்பு, ஏழை மற்றும் சமூக ரீதியில் பின்தங்கி இருந்த மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ இடங்களில் சேர்ந்தனர் என்பதை ஆராயும்போது இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது. எனவே, இந்த மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திரும்பி அனுப்பியுள்ளார். மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கான காரணங்களைக் கடந்த பிப். 1ஆம் தேதி விளக்கப்பட்டுள்ளது. வேலூர் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில் சமூக நீதி தொடர்பான விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்தே நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஏனென்றால் நீட் தேர்வு பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி. சமூக நீதியை உறுதி செய்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.