‘இந்தியா டுடே’ நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பெற்று சாதித்து காட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடே நிறுவனம் இந்திய அளவில் மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழில் முதலீடு, வேளாண்மை வளர்ச்சி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தைத் தேர்வு செய்து, “மாநிலங்களில் சிறந்த மாநிலம்” எனும் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. 

அவ்வகையில் இந்தியா டுடே நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2021 ஆம் ஆண்டுக்கான மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

India Today Award Tamil Nadu

அதன்படி ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த 2018, 2019, 2020 எனத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த விருதை வென்ற தமிழகம், இந்த ஆண்டும் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது.

1303.5 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 1,257.2 புள்ளிகளுடன் இமாச்சலப்பிரதேசம் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 2-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. கேரளா மற்றும் குஜராத் மாநிலங்கள் முறையே 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு முன்னேறி வந்துள்ளன.

பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயலாற்றிய மாநிலத்துக்கான விருதை தெலுங்கானா மாநிலம் பெற்றிருக்கிறது.  இந்தப் பிரிவில் பீகார் தற்போது முன்னேறி வருகிறது.  

சுகாதாரம், சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறையில் சிறந்த மாநிலமாக கேரளா தேர்வாகியிருக்கிறது. 

அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் வளர்ச்சி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதாக பஞ்சாப் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத் துறையில் பெரும் முன்னேற்றம் கண்ட மாநிலம் எனும் அங்கீகாரத்தையும் பஞ்சாப் மாநிலம் அடைந்திருக்கிறது. 

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான விருது ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது.  இந்தப் பிரிவில் முன்னேறி வரும் மாநிலமாக பீகார் உள்ளது.

நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 

சட்டம் மற்றும் ஒழுங்கு பேணிக் காப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலம் எனும் விருது குஜராத்துக்கு கிடைத்துள்ளது.

அதிக தொழில் முனைவோர் உருவாகும் மாநிலமாக  ஹரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

India Today Award State Tamil Nadu

கல்வியில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலத்துக்கான விருது இமாசல பிரதேசத்துக்குக் கிடைத்திருக்கின்றது.

சுத்தமாக உள்ள மாநிலத்தில் பஞ்சாபிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
 
கடந்த காலத்தை விட ஒட்டுமொத்தமாக முன்னேறிய மாநிலப் பட்டியலில் பீகாருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய குடும்ப சுகாதார கள ஆய்வு (2015-16)-ஐ அடிப்படையாகக் கொண்டு நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் மிகவும் ஏழ்மையான மாநிலங்களில் பீகார் முதலிடத்தில் இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய டுடே நிறுவனம் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பீகார் முன்னேறியிருப்பது சற்று ஆறுதலை தந்துள்ளது.  

அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவில் ஜார்கண்ட் மாநிலமும், வேளாண் வளர்ச்சி துறையில் மத்தியப்பிரதேச மாநிலம் முன்னேறி வருவதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரிவில் பாஜக ஆளும் கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் முன்னேறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்படிப் பல்வேறு பிரிவுகளில் பல மாநிலங்களுக்கு இந்தியா டுடே நிறுவனம் சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.