“பாஜக தற்போது வணிகமயம் ஆக்கப்பட்டு உள்ளதாக” கோவா பாஜக எம்எல்ஏ வான மைக்கேல் லோபோ கவலையுடன் தெரிவித்து உள்ளார்.
தேசிய கட்சியான பாஜக, தற்போது மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. அத்துடன், காங்கிரஸ் கட்சி ஆண்டு வந்த பல மாநிலங்களையும் பாஜக தன் வசப்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறது.
அதே நேரத்தில், பாஜகவில் முன் எப்போதும் இல்லாத வகையில், பல்வேறு பிரபலங்களும், நடிகர் நடிகைகளும், விளையாட்டு நட்சத்திரங்களும் சேர்ந்து, அந்த கட்சியை இன்னும் பிரபலப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், “கோவா மாநிலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நடத்திய பாதையில் பாஜக கட்சி தற்போது பயணிக்கவில்லை” என்று, கோவா பாஜக எம்எல்ஏவான மைக்கேல் லோபோ கூறியிருக்கிறார்.
அதாவது, கோவா பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ, தனது மனைவி டெலிலாவை வேட்பாளராக நிறுத்த பாஜகவிடம் வலியுறுத்தி வந்தார் என்று, கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், அவருக்கு கட்சியின் சார்பில் போட்டியிட இடம் மறுக்கப்படுவதாகவும், இதனால் அவர் பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்கிற தகவலும் தற்போது பரவி வருகின்றன.
இந்த சூழலில் தான், “கோவா மாநில பாஜக கட்சி, தற்போது வணிகமயம் ஆக்கப்பட்டு விட்டதாகவும், மறைந்த முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நடத்திய பாதையில் தற்போது பாஜக கட்சி செல்லவில்லை” என்றும், அதே கட்சியில் உள்ள எம்எல்ஏ வான மைக்கேல் லோபோ கவலையுடன் கூறியுள்ளார்.
அத்துடன், “பாஜக வித்தியாசமான கட்சியாக அறியப்பட்டது என்றும், ஆனால் அது வித்தியாசமான கட்சி அல்ல என்பது சமீபகாலங்களில் தெரிந்து விட்டது” என்று கூறிய அவர், “தற்போது கட்சிக்காரர்களுக்கு கட்சியில் இப்போதெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை” என்றும், அவர் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.
மேலும், “பாரிக்கரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் கட்சியில் தற்போது ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றும், சொந்த கட்சிக்குள் மனோகர் பாரிக்கரின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் அவரது நலம் விரும்பிகளை, விரும்பாத சில குழுக்கள் கட்சிக்குள் இருந்து வருகின்றன” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளன.
அதாவது, முன்னதாக கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியில் இருந்தபோது அவர் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, தற்போதைய முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பதவியேற்றார். ஆனால், பாரிக்கர் மறைந்த அந்த நேரத்திலேயே அவருடைய மகன் உத்பலும், “எனது தந்தை வகுத்த பாதையில் பாஜக கட்சி இப்போது நடக்கவில்லை” என்று, அப்போதே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.