வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்... தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு முன்னாள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலத்தின் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி புதிய தலைமை செயலக காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். ஐ.எப்.எஸ் அதிகாரியான இவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் வெங்கடாச்சலம் ஓய்வு பெற இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 13.5 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெங்கடாச்சலம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாச்சலத்தின் இரு செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
சோதனையின்போது வெங்கடாச்சலத்தின் பணம் மற்றும் நகைகள் பறிபோனதால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்டதில் சர்ச்சைகள் எழுந்தது.
வெங்கடாச்சலத்தின் தற்கொலை பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை வேளச்சேரி போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இன்று அல்லது நாளை நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ் அதிகாரியான வெங்கடாசலம், மாநில வனத்துறை சேவை அதிகாரியாக 1988 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். பணிமூப்பு அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து மாநில வனத்துறையில் பல்வேறு படிநிலைகளில் தமிழகம் முழுவதும் பணியாற்றியுள்ளார்.
கடந்து 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவர் 2013 - 2014 ம் ஆண்டில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராக பதவி வகித்துள்ளார். பின் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக 2017 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
பணி ஓய்வு பெற்ற பிறகு செப்டம்பர் மாதம் 2019-ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகாலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த பதவிகளை வகித்த காலங்களில், வெங்கடாசலம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.