பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் வழக்கு.. அரசிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
By Aruvi | Galatta | Apr 13, 2021, 03:52 pm
பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் புகார் தொடர்பான விசாரணையின் முதல்கட்ட அறிக்கையை விசாகா குழு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்து உள்ளது.
தமிழக முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், முதலமைச்சருக்கான காவல் கண்காணிப்பாளர் பணியை மேற்கொண்டு வந்தார்.
அப்போது, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறப்பு டிஜிபி அலுவலர் மீது, விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர் என்றும் கூறப்பட்டது.
அத்துடன், இந்த பாலியல் புகார் கொடுக்கவிடாமல் தடுத்த காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மீதும், கூடுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பணி செய்யும் இடத்தில் பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த விசாகா குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், மேலும் 5 பேர் இடம் பெற்று உள்ளனர்.
முக்கியமாக, இந்த புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபியிடம் விசாகா குழு, சென்னையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி தீவிரமாக விசாரணை நடத்தியது.
இந்தப் புகார் தொடர்பாக விசாகா குழு மொத்தம் 14 சாட்சிகளிடம் இது வரை விசாரணை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், விசாகா குழு முதற்கட்ட அறிக்கையைத் தயார் செய்து இருக்கிறது. இந்த அறிக்கையை, விசாகா குழு தமிழ்நாடு அரசிடம் தற்போது சமர்ப்பித்து உள்ளது.
முக்கியமாக, இது முதற்கட்ட அறிக்கை என்றும், முழுமையான அறிக்கை இனிதான் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. விசாகா குழு இனி தீவிரமாக விசாரணை நடத்தி, தமிழக அரசிடம் முழுமையான அறிக்கை கொடுத்த பிறகே, இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், அரசு வட்டாரங்களில் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.