தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார் அன்னபூரணி, ஆசிரமம் தொடங்கி உள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதங்களுக்கு முன்பு புதிதாக சாமியார் அவதாரம் எடுத்து, எடுத்த எடுப்பிலேயே தமிழகம் முழுவதும் பெரும் பிரபலமானார் அன்னப்பூரணி அரசு அம்மா. 

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் அவர் பிரபலமாக ஒரு காரணம், தனது ஆன்மிக பிரச்சாரத்தை அவர் சமூக வலைதளங்கள் மூலமாக கையில் எடுத்ததே மிக முக்கிய காரணமாகும்.

அந்த வகையில், ஃபேஸ்புக் பக்கத்தில் “நான் தான் ஆதிபராசக்தியின் புதிய அவதாரம்” என்று கூறிக்கொண்டு, அன்னபூரணி என்ற பெண், பொது மக்களுக்கு அருள் வாககு கூறி வருவதாக, வித விதமான புதிய வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது, தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால், தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அதிலிருந்து மீள்வதற்குள் பெண் சாமியார் அன்னபூரணியை பற்றிய பல்வேறு செய்திகளும், வதந்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைக்கட்ட தொடங்கின.

பெரும் ட்ரெண்ட் ஆகிப்போன பெண் சாமியார் அன்னபூரணி அம்மாக்கு மொத்தம் 3 கணவர்கள் இருப்பதாகவும், ஆனால், அவர் தற்போது 4 வதாக ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், அப்போது பெரும் சர்ச்சைக்குறிய செய்திகள் வெளிவந்தன.

அதன் பின்னர், “தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என்று பொய் பரப்புரை செய்து வரும் போலியான பெண் சாமியார் அன்னபூரணியை  கைது செய்ய கோரி” தமிழ்நாடு இந்து சேவா சங்கம், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அப்போது புகார் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக” பெண் சாமியார் அன்னப்பூரணி, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். அப்போது, வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதுவும், பெரிய அளவில் பேசும் பொருளமாக மாறியது.

இதனையடுத்து, அவர் பற்றி பேசுவது சற்று குறைந்த நிலையில், சர்ச்சைகளும் சற்று குறைந்திருந்தன.

அதன் தொடர்ச்சியாக, அன்னபூரணி அரசு அம்மாவின் “அம்மா எனர்ஜி தர்ஷன் என்னும் புதிய திட்டத்திற்கு 700 கட்டணம்” வசூக்கப்படுவதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆன்மீக பயிற்சி வழங்கி அனைவருக்கும் முக்தி வழங்கும் விதமாக பெண் சாமியார் அன்னபூரணி அரசு, தற்போது ஆசிரமம் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதுவும், ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் தான், பெண் சாமியார் அன்னபூரணி ஆசிரமம் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுவும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் பெண் சாமியார் அன்னபூரணி, ஆசிரமம் கட்ட நிலம் வாங்கிய நிலையில், இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் அன்னபூரணி, “அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்கி, அவர்களுக்கு முக்தி அளிக்க இருப்பதாகவும்” அவர் கூறினார். தற்போது, சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார் அன்னபூரணி, ஆசிரமம் தொடங்கி உள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.