கள்ளக்காதல் பிரச்சனை.. காதலியின் கணவரை கொன்ற பஸ் கண்டக்டர்!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே களரி கண்மாய் பகுதியில் ஏர்வாடி அருகே உள்ள இதம்பாடல் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் தர்மர் அவருக்கு வயது 40. அவருடைய புதிய மோட்டார் சைக்கிள் என்ஜின் இல்லாமல் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மேலும் தேடிப்பார்த்தபோது தர்மரின் கைப்பை கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி புதிய மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்ற தர்மர் மாயமானதும் அவரை தேடிவந்த தகவலும் கிடைத்தது.
மேலும் இதன் தொடர்பாக அவருடைய தங்கை ஏர்வாடி வடக்குத்தெரு யசோதை, வயது 38 என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். தர்மருக்கு திருமணமாகி பாண்டியம்மாள் வயது 32 என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தர்மர் கடந்த 2010-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவரின் மனைவி பாண்டியம்மாள் பனையடியேந்தல் பகுதியை சேர்ந்த பசுமலை மகன் அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் வயது 45 என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த தர்மர் மனைவியை கண்டித்துள்ளார். இதனை அறிந்தவுடன் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள தர்மரை தீர்த்துக்கட்ட முருகேசன் திட்டமிட்டு கொலை செய்த கண்மாயில் புதைத்தது தெரியவந்தது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் தர்மரின் உடலை தோண்டி எடுத்தபோது ஒருசில எலும்புக்கூடுகள், நைலான் கயிறு மட்டுமே கிடைத்தது. இதனை தொடர்ந்து ஏர்வாடி போலீசார் தர்மர் காணவில்லை என்ற வழக்கினை மாற்றம் செய்து கொலை வழக்காக பதிவு செய்து முருகேசன், பாண்டியம்மாள், மேலமடை கருப்பையா மகன் ரவிச் சந்திரன், வேந்தோணி சந்திரன் மகன் காளிதாஸ், புத்தேந்தல் காளிமுத்தன் மகன் குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்டகோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த வழக் கில் முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், அதனை கட்டத் தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் ஜெயில்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். பாண்டியம்மாள் உள்ளிட்ட மற்ற 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.