“தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர யோசனை..
By Aruvi | Galatta | Jun 04, 2021, 03:02 pm
“தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை” செய்துள்ளதால், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் 2 வது அலையாகப் பரவி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
தமிழ் நாட்டிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராமல், தொடர்ந்து அதிகரித்ததையடுத்து கடந்த மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அப்போதும் கொரோனா தொற்று, கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரம் காலம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் படி, ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொது மக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, “ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்றும், தெரிவித்தார்.
தற்போது, தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், “ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுத்திருப்பதாக” தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும், கூறப்படுகிறது.
குறிப்பாக, “கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தவும், அதே போல் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாகக் குறைந்து வரும் மாவட்டங்களில், சில தளர்வுகளை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனாலும், “தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் இ பதிவு முறையே மேலும் தொடரும்” என்றும் கூறப்படுகிறது.