ஜெயக்குமார் கைது: மனைவி - மகன் குற்றஞ்சாட்டுவது என்ன? ஓபிஎஸ் - இபிஎஸ் கண்டனம்..
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது மனைவி, மகன் மற்றும் ஓபிஎஸ் - இபிஎஸ் தெரிவித்துள்ள கண்டனங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மார்ச் மாதம் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 15 நாள் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது மனைவி, மகன் மற்றும் ஓபிஎஸ் - இபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, பேசிய ஜெயக்குமாரின் மனைவி, “எங்க வீட்டு கதவை உடைத்துவிடுவது போல போலீசார் உள்ளே நுழைந்தனர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் நானும், என் மகனும் தான் இருந்தோம். உங்களை நம்பி நான் அனுப்ப முடியாது” என்று, நான் விடப்பிடியாக கூறினேன்.
ஆனால், “நான் முடியாது என்று கூறிய பிறகும், வலுக்கட்டாயமாக என் கணவரை காவல் துறையினர் இழுத்துச் சென்றனர். என்ன செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது” என்று, ஆவேசமாக கூறி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், “எனது தந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வீட்டில் பெண்கள் எல்லாரும் இருந்தனர். அப்போது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், என் தந்தையை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், போலீசார் அதிகாரதுஷ் பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர்” என்று, குற்றம்சாட்டினார்.
மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல் துறையில் ஒப்படைத்தது குற்றமா?” என்று, கேள்வி எழுப்பி உள்ளார்.
“முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என்று, முதல்வர் கூறுகிறாரா?” என்றும், கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன், “எதையும் சட்டரீதியாக சந்திக்க அதிமுக தயாராக உள்ளது” என்றும், அவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக தனது டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ள அவர், “சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த கழக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது” என்று, பதிவிட்டு உள்ளார்.
குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சேர்ந்து கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட வந்த திமுகவினரை ஜெயக்குமார் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றும் மனப்பான்மையில் ஜெயக்குமார் செய்த இந்த செயல் எந்த வகையில் முறைகேடானது? ஓரிடத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபரை பிடித்து, அவர் தப்பிக்கக் கூடாது என்பதற்காக கைகளை கட்டி போலீஸாரிடம் ஒப்படைப்பது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்றிருக்கின்றன. அது போலவே, கள்ள ஓட்டு போட வந்த நபரை பிடித்து ஜெயக்குமார் போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர் செய்தது நியாயம் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்” என்று, குறிப்பிட்டு உள்ளனர்.
திமுகவின் இந்த அராஜகத்தையும், அதிமுகவினர் மீது முறைகேடாக நடத்தப்படும் தாக்குதலையும் சட்டத்தின் துணைக்கொண்டு கழகம் முறியடிக்கும்” என்றும், அவர்கள் இருவரும் கூட்டாகி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதே போல், ஜெயக்குமாரின் கைதுக்கு பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.