இந்தியாவின் யானைகள் - அழிவின் விவரங்கள் சில!
By Madhalai Aron | Galatta | Jul 06, 2020, 08:55 pm
சமீப காலமாக அதிக விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கும் விஷயம், விலங்குகளும் அதன் உயிர்களை பறிக்கும் மனிதர்களின் நடவடிக்கையும். எந்தவொரு உயிருமே செய்யக்கூடாத பாவத்தை, மனிதன் வன உயிர்களின் மீது செய்து வருகிறான் என குற்றம் சொல்கிறார்கள் வனவிலங்கு ஆர்வலர்கள். இந்தியாவின் யானைகள் பற்றியும், அவற்றின் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் பற்றியும், ஒரு சிறு தொகுப்பு இங்கே!
இந்தியாவில் உள்ள யானைகள் பொதுவாக 2 முதல் 3.5 மீ (6.6 முதல் 11.5 அடி) உயரம் வளரக்கூடியது.
ஒவ்வொரு யானையும் சுமார் 2,000 முதல் 5,000 கிலோ வரையிலான எடையைக் கொண்டிருக்கும்.
ஒரு யானை ஒரு நாளைக்கு மட்டும் 200 முதல் 250 கிலோ உணவை உட்கொள்ளும். அதேபோல், ஒரு நாளைக்கு 150 முதல் 200 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும்.
உலகிலேயே மிகக் குறைந்த நேரம் உறங்கும் பாலூட்டி யானைகள் தான்.
யானை சராசரியாக 6 மணி நேரம் வரை தூங்கும்.
யானையின் காதுகள் அகன்று பரந்து, நீளமாக இருக்கும். பாசம் மிகுந்த உயிரினத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு யானை தான்.
ஒரு யானைக் குட்டி தனக்கேதும் பிரச்னை எனில் அதன் அம்மாவிடம் போய் முறையிடுமாம்.
பிற உயிரினங்களில் மிகவும் புத்திசாலியானதும் தன்னைத் தற்காத்துக் கொள்வதில் விழிப்புஉணர்வுடையதும் யானை இனம்தான். இதற்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 20-ம் நூற்றாண்டு வரை பல மில்லியன் அளவில் இருந்த ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை 450000-700000 வரை குறைந்துள்ளது என்றும், 1,00,000-க்கும் அதிகமாக இருந்த ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35,000-40,000-வரை தான் இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
அதேபோல், 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 27,312 யானைகள் மட்டுமே இருக்கின்றன.
2012 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது 30,711 யானைகள் இருந்தன.
இந்தியாவில் உள்ள யானைகளில் தென்மாநிலங்களில் மட்டும் 44% யானைகள் உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் 30% யானைகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிகளவில் யானைகள் உள்ள மாநிலம் கர்நாடகா.
கர்நாடகாவில் 6,049 யானைகள் உள்ளன.
அடுத்த படியாக அஸ்ஸாம் மாநிலத்தில் 5,719 யானைகளும்,
கேரளாவில் 3,054 யானைகளும் உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 2,761 யானைகள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆனால் கடந்த 2012 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது 4,015 யானைகள் இருந்துள்ளன.
5 ஆண்டுகளில் 1,254 யானைகள் இறந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 80 யானைகளுக்கும் மேல் இறக்கின்றன.
யானைகள் இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமாக விஷத்தினால் இறப்பது, வேட்டையாடப்படுவதால் இறப்பது, ரயில் விபத்தினால் இறப்பது, மின்சாரம் பாய்வதால் இறப்பது என்று தொடர்ந்து அதிகளவில் இறப்புகள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு மின்சாரம் பாய்ந்து இறந்த யானைகள் மட்டும் 390.
இந்தியாவில், உள்ள பல்வேறு கோயில்களில் பல்வேறு யானைகள் உள்ளன. அதில், ஐந்து மாநிலங்களில் உள்ள 112 கோயில்களில் மட்டும் மொத்தம் 280 யானைகள் உள்ளன.
அதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 174 யானைகள் கோயில்களில் உள்ளன. தமிழகத்தில் 67 யானைகள் உள்ளன.
அதேபோல், கர்நாடகாவில் 32 யானைகளும், மகாராஷ்டிராவில் 5 யானைகளும், ஆந்திர பிரதேசத்தில் 2 யானைகளும் கோயில்களில் உள்ளன.
தற்போது கோயில்களில் உள்ள எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
பல்லுயிர்ச் சூழல் பெருகி, காடுகள் வளமை பெற்று, இயற்கை செழிப்பாக வளரப் பாதுகாப்பு மிக மிக அவசியம்.
இதில் ஆதிகாலத்திலிருந்து வாழ்ந்து வந்த யானை இனங்கள் நம் காலத்தில் 90% அழிந்துவிட்டது
- பெ.மதலை ஆரோன்.